புரோ கபடி லீக்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாட்னா பெங்கால் அணியை வீழ்த்தியது


புரோ கபடி லீக்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாட்னா  பெங்கால் அணியை வீழ்த்தியது
x
தினத்தந்தி 26 Oct 2017 9:00 PM GMT (Updated: 26 Oct 2017 8:20 PM GMT)

புரோ கபடி லீக் போட்டியில் பெங்கால் அணியை வீழ்த்தி பாட்னா பைரட்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சென்னை,

புரோ கபடி லீக் போட்டியில் பெங்கால் அணியை வீழ்த்தி பாட்னா பைரட்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

புரோ கபடி

5–வது புரோ கபடி லீக் தொடரில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டிக்கான 2–வது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி, பெங்கால் வாரியர்சுடன் மோதியது.

இதில் தொடக்கம் முதலே பாட்னா வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ரைடில் கலக்கிய அந்த அணியின் நட்சத்திர வீரர் பர்தீப் நர்வால் மளமளவென புள்ளிகளை வாரி குவித்தார். மூன்று முறை பெங்கால் ஆல்–அவுட் ஆக, முதல் பாதியில் பாட்னா 21–12 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

2–வது பாதியிலும் பாட்னாவின் முன்னிலை நீடித்தது. ஆனால் பதிலடி கொடுக்கும் வகையில் ஆக்ரோ‌ஷமாக மல்லுகட்டிய பெங்கால் வீரர்கள் எதிரணிக்கு கடும் நெருக்கடி தந்தனர். கடைசி ஒரு நிமிடம் இருக்கையில் பாட்னா ஆல்–அவுட் ஆனதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அப்போது பெங்கால் 42–46 என்ற புள்ளி கணக்கில் வெகுவாக நெருங்கியது.

பாட்னா வெற்றி

இதனால் இறுதி ஒரு நிமிடத்தில் பாட்னா அணியினர் சுதாரிப்புடன் விளையாடினர். அதாவது எதிரணி வீரர் ரைடுக்கு வரும் போது கணிசமான புள்ளிகளை எடுக்கக்கூடாது என்பதற்காக ஒரு வீரரை தானாகவே முன்வந்து அவுட் கொடுத்து முன்னேறுவதை தடுத்து நிறுத்தினர்.

முடிவில் பாட்னா பைரட்ஸ் அணி 47–44 என்ற புள்ளி கணக்கில் பெங்காலை வீழ்த்தி 3–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. 36 முறை ரைடு சென்ற பாட்னா கேப்டன் பர்தீப் நர்வால் 23 புள்ளிகள் திரட்டி அந்த அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்.

தோல்வியின் மூலம் 3–வது இடத்தை பிடித்த பெங்கால் அணிக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

நாளை இறுதிப்போட்டி

இதே மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு நடைபெறும் மகுடத்திற்கான இறுதி ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் அணி, அறிமுக அணியான குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை சந்திக்கிறது.


Next Story