பார்முலா1 கார்பந்தயம்: 4–வது முறையாக ஹாமில்டன் ‘சாம்பியன்’


பார்முலா1 கார்பந்தயம்: 4–வது முறையாக ஹாமில்டன் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 30 Oct 2017 9:11 PM GMT (Updated: 30 Oct 2017 9:11 PM GMT)

பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 4–வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

மெக்சிகோசிட்டி,

கார் பந்தயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பார்முலா1 வகை கார்பந்தயம் இந்த ஆண்டு 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 18–வது சுற்றான மெக்சிகன் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள மெக்சிகோ சிட்டி ஓடுதளத்தில் நேற்று முன்தினம் நடந்தது. பந்தய தூரமான 305.354 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் சீறிப்பாய்ந்தனர். இதில் 5 வீரர்களை தவிர மற்ற அனைவரும் பந்தய தூரத்தை நிறைவு செய்தனர்.

நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பான் (ரெட்புல் அணி) 1 மணி 36 நிமிடம் 26.552 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார். அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது. பின்லாந்து வீரர்கள் வால்டெரி போட்டாஸ் 2–வதாகவும் (18 புள்ளி), கிமி ரெய்க்கோனன் 3–வதாகவும் (15 புள்ளி) வந்தனர். முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 4–வதாக வந்து 12 புள்ளிகளை பெற்றார்.

முதல் ரவுண்டில் செபாஸ்டியன் வெட்டலின் காருடன் எதிர்பாராத விதமாக மோதியதால் இங்கிலாந்து நட்சத்திர வீரர் லீவிஸ் ஹாமில்டனின் (மெர்சிடஸ் அணி) கார் டயர் பஞ்சரானது. தொழில்நுட்ப குழுவினரின் உதவியுடன் டயரை சரி செய்து கொண்டு தொடர்ந்து காரை செலுத்திய ஹாமில்டனால் 9–வது இடமே (2 புள்ளி) பிடிக்க முடிந்தது.

இதுவரை நடந்துள்ள 18 சுற்றுகள் முடிவில் ஹாமில்டன் 333 புள்ளிகளுடன் முதலிடத்திலும், செபாஸ்டியன் வெட்டல் 277 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும், வால்டெரி போட்டாஸ் 262 புள்ளிகளுடன் 3–வது இடத்திலும் உள்ளனர்.

இன்னும் 2 சுற்று போட்டி மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் ஹாமில்டன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வது உறுதியாகி விட்டது. அவரது பிரதான எதிரியான செபாஸ்டியன் வெட்டல் கடைசி இரு பந்தயங்களில் வெற்றி பெற்றாலும் மொத்தம் 50 புள்ளிகளே கிடைக்கும். ஹாமில்டனை முந்த வாய்ப்பில்லை. இதனால் மெச்சிகோ போட்டி முடிந்ததும் ஹாமில்டன் உற்சாகத்தில் திளைத்தார்.

32 வயதான ஹாமில்டன் பார்முலா1 சாம்பியன்ஷிப் பட்டத்தை ருசிப்பது இது 4–வது முறையாகும். ஏற்கனவே 2008, 2014, 2015 ஆண்டுகளிலும் அவர் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். இந்த ஆண்டு முழுவதும் வலுவாக செயல்பட்ட ஹாமில்டன் பட்டம் வெல்வதற்கு தகுதியானவர் என்று வெட்டல் பாராட்டினார். அதே சமயம் இந்த மாதிரியான முடிவுடன் (9–வது இடத்துக்கு பின்தங்கியதை குறிப்பிட்டு) பட்டத்தை வெல்வதில் உண்மையான திருப்தி இல்லை என்று ஹாமில்டன் குறிப்பிட்டார்.

இந்த மகுடத்தை அதிக முறை சூடியவர்களின் பட்டியலில் ஜெர்மனியின் மைக்கேல் ஷூமாக்கர் (7 முறை), அர்ஜென்டினாவின் ஜூவான் மானுல் பாங்கியோ (5 முறை) ஆகியோருக்கு அடுத்து பிரான்சின் அலைன் புரோஸ்ட், ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டலுடன் (இருவரும் தலா 4 முறை) ஹாமில்டன் 3–வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த சீசனின் 19–வது சுற்று பந்தயம் வருகிற 12–ந்தேதி பிரேசிலில் நடக்கிறது.


Next Story