இந்திய ஒலிம்பிக் சங்க பொதுக்குழு கூட்டம் டெல்லிக்கு மாற்றம்


இந்திய ஒலிம்பிக் சங்க பொதுக்குழு கூட்டம் டெல்லிக்கு மாற்றம்
x
தினத்தந்தி 7 Nov 2017 8:41 PM GMT (Updated: 7 Nov 2017 8:41 PM GMT)

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.) அவசர செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் ஐ.ஓ.ஏ தலைவர் என்.ராமச்சந்திரன் கலந்து கொள்ளவில்லை.

புதுடெல்லி,

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.) அவசர செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் ஐ.ஓ.ஏ தலைவர் என்.ராமச்சந்திரன் கலந்து கொள்ளவில்லை. மூத்த துணைத்தலைவர் வீரேந்தர நானாவதி தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினார். மொத்தமுள்ள 27 உறுப்பினர்களில் 21 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை சென்னையில் இருந்து டெல்லிக்கு மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 14–ந்தேதி சென்னையில் நடைபெறும் என்றும், அதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் ஐ.ஓ.ஏ. தலைவர் என்.ராமச்சந்திரன் கூறியிருந்தார். ஆனால் இப்போது அவரது முடிவுக்கு எதிராக, பொதுக்குழு கூட்டம் சென்னையில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. இருப்பினும் தேதியில் மாற்றம் செய்யப்படவில்லை. அன்றைய தினமே நிர்வாகிகள் தேர்தலும் நடைபெறும் என்று துணைத்தலைவர் தர்லோசான் சிங் நிருபர்களிடம் தெரிவித்தார். ஐ.ஓ.ஏ. சட்ட விதிக்குட்பட்டு தான் கூட்டத்தை நடத்தியிருப்பதாகவும், அதனால் இது அதிகாரபூர்வமான கூட்டம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த பிரச்சினையால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் குழப்பம் உருவாகியுள்ளது.


Next Story