துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 19 Dec 2017 8:30 PM GMT (Updated: 19 Dec 2017 6:20 PM GMT)

11–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்.

*11–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள். ஏலத்தில் வீரர்களை எடுக்க ஒவ்வொரு அணியும் ரூ.80 கோடி வரை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மெகா ஏலம் அடுத்த ஆண்டு ஜனவரி 27 மற்றும் 28–ந்தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் நேற்று தெரிவித்தார்.

*பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளரும் நட்சத்திர வீரர் 23 வயதான பாபர் அசாம் அளித்த ஒரு பேட்டியில், ‘பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் என்னை, விராட் கோலியுடன் ஒப்பிட்டு கூறினார். விராட் கோலி மிகப்பெரிய வீரர். அவரை அப்படி என்னுடன் ஒப்பிடக்கூடாது என்று கருதுகிறேன். எங்களது இருவரது கிரிக்கெட் வாழ்க்கை தொடக்கத்திலும் புள்ளி விவரங்கள் ஓரளவு சமமாக இருந்திருக்கலாம். ஆனால் தற்போது விராட்கோலி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழ்கிறார். அவரை போன்று நானும் உயரிய ஆட்டத்தை எங்களது அணிக்காக வெளிப்படுத்த விரும்புகிறேன்’ என்றார்.

*தெற்காசிய ஜூனியர் பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (15 வயதுக்குட்பட்டோர்) வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் இந்தியா 10–0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை பந்தாடியது. இந்திய அணியில் பிரியங்கா தேவி, சுனிதா முண்டா ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தனர். இந்திய அணி அடுத்து வங்காளதேசத்துடன் நாளை மோதுகிறது.

*நியூசிலாந்தில் விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரில் 0–2 என்ற கணக்கில் மண்ணை கவ்வியது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. வெஸ்ட் இண்டீஸ்–நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வாங்கரேவில் இன்று நடக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் திரும்பியிருப்பது எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.


Next Story