இந்திய ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய்னா, சிந்து ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி


இந்திய ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய்னா, சிந்து ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 1 Feb 2018 9:30 PM GMT (Updated: 1 Feb 2018 8:13 PM GMT)

இந்திய ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனைகள் சாய்னா, சிந்து கால்இறுதிக்கு தகுதி பெற்றனர். ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார்.

புதுடெல்லி,

இந்திய ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனைகள் சாய்னா, சிந்து கால்இறுதிக்கு தகுதி பெற்றனர். ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார்.

சாய்னா, சிந்து அபாரம்

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்றில் நடப்பு சாம்பியனான பி.வி.சிந்து (இந்தியா) 21-10, 21-14 என்ற நேர் செட்டில் லின்டா ஜிட்சிரி (பல்கேரியா) துவம்சம் செய்து கால்இறுதியை எட்டினார். சிந்து அடுத்து பீட்ரிஸ் கோரலெஸ்சை (ஸ்பெயின்) எதிர்கொள்கிறார்.

மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-12, 21-11 என்ற நேர் செட்டில் லின் ஹோஜ்மார்க்கை (டென்மார்க்) வீழ்த்தி கால்இறுதியை உறுதி செய்தார். இதே போல் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) 15-21, 21-15, 21-11 என்ற செட் கணக்கில் காவ் பாங்ஜியை (சீனா) போராடி வென்றார். இந்த ஆட்டம் 1 மணி 23 நிமிடங்கள் நீடித்தது. இரட்டையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் அஸ்வினி-ரெட்டி என்.சிக்கி ஜோடி 21-9, 21-2 என்ற நேர் செட்டில் சக நாட்டவர்களான மேஹா மோர்ச்சனா-சங்கமித்ரா ஆகியோரை ஊதித்தள்ளினர்.

ஸ்ரீகாந்த் தோல்வி

ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் காஷ்யப் 21-19, 19-21, 21-12 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் ஸ்ரேயான்ஷ் ஜெய்ஸ்வாலை போராடி வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இந்தியாவின் சாய் பிரனீத், சமீர் வர்மா ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

அதே சமயம் உலக தரவரிசையில் 3-வது இடம் வகிப்பவரும், முன்னாள் சாம்பியனுமான இந்தியாவின் நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்த் 19-21, 17-21 என்ற நேர் செட்டில் 85-ம் நிலை வீரரான மலேசியாவின் ஜூல்கர்னைனிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.

Next Story