உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாகெர்க்கு 2-வது தங்கம்


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாகெர்க்கு 2-வது தங்கம்
x
தினத்தந்தி 6 March 2018 11:15 PM GMT (Updated: 6 March 2018 8:29 PM GMT)

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாகெர் 2-வது தங்கம் வென்றார்.

புதுடெல்லி,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாகெர் 2-வது தங்கப்பதக்கம் வென்றார்.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மெக்சிகோவில் உள்ள குடலாஜாராவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மனு பாகெர்-ஓம்பிரகாஷ் மிதர்வால் ஜோடி 476.1 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.

இந்த போட்டியில் மனு பாகெர் தொடர்ச்சியாக வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். முந்தைய நாளில் நடந்த 10 மீட்டர் ஏர்பிஸ்டல் தனிநபர் பிரிவிலும் அவர் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். ஜெர்மனியின் கிறிஸ்டியன்-சான்ட்ரா ரிட்ஸ் தம்பதி 475.2 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தையும், பிரான்ஸ் இணையான செலின் கோபெர்விலே-புளோரியன் போகுய்ட் 415.1 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கத்தையும் வென்றது. இந்தியாவின் மஹிமா அக்ரவால்-ஷாஜர் ரிஸ்வி ஜோடி 372.4 புள்ளிகளுடன் 4-வது இடம் பெற்றது.

தனது முதல் உலக போட்டியிலேயே அடுத்தடுத்து 2 தங்கப்பதக்கம் வென்று அசத்திய அரியானாவை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியான மனு பாகெர் உலக கோப்பை போட்டியில் குறைந்த (16 வயது) வயதில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனைகளில் ஒருவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2-வது தங்கம் வென்ற பிறகு மனு பாகெர் அளித்த பேட்டியில், ‘சீனியர் உலக கோப்பை போட்டியில் 2 தங்கப்பதக்கம் வெல்வேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இந்த வெற்றியை என்னால் நம்பமுடியவில்லை. தனிநபர் பிரிவு போட்டியில் லேசான பதற்றம் அடைந்து சில சுற்றுகளில் துல்லியமாக இலக்கை சுடவில்லை. ஆனால் சரிவில் இருந்து மீண்டு தங்கப்பதக்கத்தை வென்றேன்’ என்று தெரிவித்தார்.

10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் சீனாவின் சூ காங்-சென் கெடோ ஜோடி 502.0 புள்ளிகள் குவித்து உலக சாதனை படைத்து தங்கப்பதக்கத்தையும் கைப்பற்றியது. ருமேனியாவின் அலின் மோல்டோவெனு-லாரா ஜார்ஜெடா இணை 498.4 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், இந்தியாவின் தீபக் குமார்-மெகுலி கோஷ் ஜோடி 435.1 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றன. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 4 வெண்கலத்துடன் பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Next Story