மாணவ–மாணவிகளுக்கான துப்பாக்கி சுடுதல் பயிற்சி முகாம் சென்னையில் நடக்கிறது


மாணவ–மாணவிகளுக்கான துப்பாக்கி சுடுதல் பயிற்சி முகாம் சென்னையில் நடக்கிறது
x
தினத்தந்தி 30 March 2018 9:00 PM GMT (Updated: 30 March 2018 7:57 PM GMT)

சென்னை ரைபிள் கிளப் சார்பில் முதல்முறையாக மாணவ–மாணவிகளுக்கான துப்பாக்கி சுடுதல் (ஏர் ரைபிள், ஏர் பிஸ்டல்) பயிற்சி முகாம் எழும்பூர் பாந்தியன் ரோட்டில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் சூட்டிங் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளச்சில் நடத்தப்படுகிறது.

சென்னை,

சென்னை ரைபிள் கிளப் சார்பில் முதல்முறையாக மாணவ–மாணவிகளுக்கான துப்பாக்கி சுடுதல் (ஏர் ரைபிள், ஏர் பிஸ்டல்) பயிற்சி முகாம் எழும்பூர் பாந்தியன் ரோட்டில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் சூட்டிங் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளச்சில் நடத்தப்படுகிறது. 10 வயது முதல் பிளஸ்–2 வரையிலான மாணவ–மாணவிகள் 40 பேர் முதல் கட்டமாக இந்த பயிற்சியை பெற இருக்கிறார்கள். இந்த பயிற்சி முகாம் இன்று முதல் தொடங்கி ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது. தேசிய அளவிலான பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் துப்பாக்கி சுடுதல் மட்டுமின்றி அதற்கு தேவையான உடல் தகுதி பயிற்சி மற்றும் மனரீதியான பயிற்சிகளும் அளிக்கப்படும். இந்த பயிற்சி முகாமில் சிறந்து விளங்கும் வீரர்–வீராங்கனைகளுக்கு மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க கட்டணம் உண்டு. தினசரி காலையில் 6 மணி முதல் 8 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படும். சர்வதேச தரம் வாய்ந்த சூட்டிங் ரேஞ்சில் இந்த பயிற்சி முகாம் அரங்கேறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த பயிற்சி முகாமின் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. இதில் சென்னை ரைபிள் கிளப் தலைவரும், மாநகர போலீஸ் கமி‌ஷனருமான ஏ.கே.விஸ்வநாதன் கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘இந்த பயிற்சி முகாமில் உள்ள வசதிகளை பயன்படுத்தி மாணவ–மாணவிகள் தேசிய மற்றும் சர்வதேச வீரர்–வீராங்கனைகளாக உருவெடுக்க முடியும். திறமையும், ஆர்வமும் உள்ள ஏழை மாணவர்கள் பணத்தை ஒரு தடையாக கருத வேண்டாம். அவர்கள் சென்னை ரைபிள் கிளப்பை அணுகினால் பயிற்சிக்குரிய போதிய உதவிகள் செய்து கொடுக்கப்படும்’ என்று தெரிவித்தார். இதில் சென்னை ரைபிள் கிளப் துணைதலைவரும், போலீஸ் கூடுதல் கமி‌ஷனருமான சே‌ஷசாயி, செயலாளர் டி.வி.சீத்தாராமராவ், பொருளாளர் ஆர்.ரவிகிருஷ்ணன், இணைசெயலாளர் எம்.கோபிநாத், செயற்குழு உறுப்பினர் டி.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story