ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம் - மானு பாகெர், பூனம் யாதவ் மிரட்டல்; டேபிள் டென்னிஸ் அணியினரும் அசத்தல்


ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம் - மானு பாகெர், பூனம் யாதவ் மிரட்டல்; டேபிள் டென்னிஸ் அணியினரும் அசத்தல்
x
தினத்தந்தி 8 April 2018 11:30 PM GMT (Updated: 8 April 2018 7:46 PM GMT)

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நேற்று ஒரே நாளில் இந்தியா 3 தங்கப்பதக்கத்தை வேட்டையாடியது.

கோல்டுகோஸ்ட்,

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரான கோல்டுகோஸ்டில் நடந்து வருகிறது. போட்டியின் 4-வது நாளான நேற்று இந்தியா ஒரே நாளில் 3 தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியது. துப்பாக்கி சுடுதலில் எதிர்பார்த்தது போலவே உலக சாம்பியனான இந்திய ‘இளம் புயல்’ மானு பாகெர் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தார்.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் களம் கண்ட மானு பாகெர், இலக்கை சரியாக சுட்டு மொத்தம் 240.9 புள்ளிகள் குவித்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை பெற்றார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹீனா சித்து 234 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினார். ஆஸ்திரேலியாவின் எலினா காலியாபோவிச்சுக்கு (214.9 புள்ளி) வெண்கலம் கிடைத்தது.

அரியானாவைச் சேர்ந்த 16 வயதான மானு பாகெர், துப்பாக்கி சுடுதலில் வியப்புக்குரிய வகையில் செயல்பட்டு வருகிறார். 11-ம் வகுப்பு மாணவியான அவர் கடந்த மாதம் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் 2 தங்கம் வென்று வரலாறு படைத்தது நினைவிருக்கலாம். 28 வயதான பஞ்சாப்பை சேர்ந்த ஹீனா சித்துக்கு தொடக்கம் மோசமாக இருந்தது. ஒரு கட்டத்தில் போட்டியை விட்டு வெளியேறும் நிலையில் இருந்த ஹீனா சித்து, அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு ஒரு வழியாக 2-வது இடத்தை பிடித்தார்.

பெண்களுக்கான பளுதூக்குதலில் 69 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அவர் ஸ்னாட்ச் பிரிவில் 100 கிலோவும், கிளன் அண்ட் ஜெர்க் பிரிவில் 122 கிலோவும் என மொத்தம் 222 கிலோ தூக்கி முதலிடத்தை பிடித்தார். இங்கிலாந்தின் சாரா டேவிஸ் வெள்ளிப்பதக்கமும் (217 கிலோ), பிஜியின் அபோலோனியா வெண்கலப்பதக்கமும் (216 கிலோ) பெற்றனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் பிறந்தவரான 22 வயதான பூனம் யாதவ் ரெயில்வேயில் பணிபுரிகிறார். அவர் கூறுகையில், ‘இந்த போட்டி கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். இங்கிலாந்து வீராங்கனை சாரா டேவிஸ் கிளன் அண்ட் ஜெர்க் பிரிவின் தனது கடைசி வாய்ப்பில் 128 கிலோ தூக்குவதற்கு வந்த போது கொஞ்சம் பதற்றமடைந்தேன். அதை அவர் வெற்றிகரமாக தூக்கினால் முதலிடத்தை பிடிக்க முடியும் என்ற நிலைமை காணப்பட்டது. ஆனால் விதி அவருக்கு வேறு விதமாக (அந்த வாய்ப்பை நழுவ விட்டார்) அமைந்ததால் எனது கழுத்தில் தங்கப்பதக்கம் விழுந்தது.

ஒரு காலத்தில் எனது தந்தை கடன் வாங்கித் தான் என்னுடைய பயிற்சி செலவுகளை கவனித்தார். அதற்குரிய பிரதிபலனாக இப்போது தங்கப்பதக்கத்தை அவருக்கு வழங்குகிறேன்’ என்றார். பூனம் யாதவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

பெண்கள் அணிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் அரைஇறுதியில் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்த இந்திய அணி தொடர்ந்து இறுதி ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சிங்கப்பூரை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் சிங்கப்பூரை பதம் பார்த்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கி வரலாறு படைத்தது. இந்திய அணியில் நட்சத்திர வீராங்கனையாக ஜொலித்த மானிகா பத்ரா ஒற்றையர் பிரிவில் 11-8, 8-11, 7-11, 11-9, 11-7 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக்கில் 3 பதக்கம் வென்ற சிங்கப்பூர் மங்கை டியான்வெய் பெங்கை வீழ்த்தினார். மாற்று ஒற்றையர் பிரிவிலும் கலக்கிய மானிகா பத்ரா 11-7, 11-4, 11-7 என்ற நேர் செட்டில் யிஹான் ஜோவை பந்தாடினார்.

மற்றொரு ஒற்றையரில் இந்தியாவின் மதுரிகா பட்கர் நேர் செட்டில் தோல்வியை தழுவினார். ஆனால் இரட்டையரில் மதுரிகா பட்கர்- மவுமா தாஸ் ஜோடி 11-7, 11-6, 8-11, 11-7 என்ற செட் கணக்கில் யிஹான் ஜோவ்- மெங்யூ இணையை வீழ்த்தியது. காமன்வெல்த் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் அணி தங்கம் வெல்வது இது 2-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு இந்திய ஆண்கள் அணி 2006-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ரவிகுமார் 224.1 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். ஆஸ்திரேலியாவின் டேன் சாம்சன் புதிய போட்டி சாதனையுடன் (245 புள்ளி) தங்கப்பதக்கமும், வங்காளதேசத்தின் அப்துல்லா ஹெல் பாகி வெள்ளிப்பதக்கமும் (244.7 புள்ளி) வென்றனர்.

பளுதூக்குதலில் 94 கிலோ உடல் எடைப் பிரிவில் இந்திய வீரர் 24 வயதான விகாஷ் தாகூர் மொத்தம் 351 கிலோ எடை தூக்கி (ஸ்னாட்ச்-159 கிலோ, கிளன் அண்ட் ஜெர்க்- 192 கிலோ) வெண்கலப் பதக்கத்தை ருசித்தார். இதில் பப்புவா நியூ கினியா வீரர் ஸ்டீவன் காரி (370 கிலோ) தங்கப்பதக்கமும், கனடா வீரர் போடி சான்டவி (369 கிலோ) வெள்ளிப்பதக்கமும் பெற்றனர்.

இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை பளுதூக்குதல் (5), துப்பாக்கி சுடுதல் (1), டேபிள் டென்னிஸ் (1) ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்று இருக்கிறது. நேற்றைய போட்டி முடிவில் பதக்கப்பட்டியலில் முதல் 3 இடங்களில் முறையே ஆஸ்திரேலியா (31 தங்கம் உள்பட 84 பதக்கம்), இங்கிலாந்து (47 பதக்கம்), கனடா (32 பதக்கம்) ஆகிய நாடுகள் உள்ளன.

இந்தியா 7 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என்று மொத்தம் 12 பதக்கத்துடன் 4-வது இடம் வகிக்கிறது.

பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியா

காமன்வெல்த் பேட்மிண்டனில் அணிகள் கலப்பு பிரிவின் அரைஇறுதியில் இந்தியா, சிங்கப்பூருடன் மோதியது. இதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் சிங்கப்பூரை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் ஆகியோர் ஒற்றையர் பிரிவிலும், சாத்விக் ரங்கிரெட்டி- அஸ்வினி ஜோடியினர் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்தனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் ரங்கிரெட்டி- சிராக் சந்திரசேகர் இணை மட்டும் தோல்வி கண்டது.

இதன் மூலம் 2014-ம் ஆண்டு காமன்வெல்த்தில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் சிங்கப்பூரிடம் அடைந்த தோல்விக்கு இந்தியா பழிதீர்த்துக் கொண்டது. தங்கப்பதக்கத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3 முறை சாம்பியனான மலேசியாவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.

மேரிகோமுக்கு பதக்கம் உறுதி

*காமன்வெல்த் போட்டியில் முதல்முறையாக அடியெடுத்து வைத்துள்ள இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் 48 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் மேஹன் கார்டனை (ஸ்காட்லாந்து) சந்தித்தார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அனுபவம் வாய்ந்த மேரிகோம் 5-0 என்ற புள்ளி கணக்கில் கார்டனை துவம்சம் செய்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் மேரிகோமுக்கு குறைந்தது வெண்கலப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது. ஆண்கள் குத்துச்சண்டை 75 கிலோ பிரிவில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் 5-0 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலியாவின் கேம்ப்பெல் சோமர்வில்லேவை சாய்த்து கால்இறுதியை எட்டினார்.

*குண்டு எறிதலில் இந்தியாவின் தேஜிந்தர்சிங் 12 வீரர்களில் ஒருவராக இறுதி சுற்றை எட்டியுள்ளார். தகுதி சுற்றில் அவர் 19.10 மீட்டர் தூரம் குண்டு வீசினார்.

*ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் முகமது அனாஸ் யாஹியா அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Next Story