காமன்வெல்த் விளையாட்டு போட்டி மல்யுத்தத்தில் சுஷில்குமார், ராகுல் தங்கம் வென்று அசத்தல்


காமன்வெல்த் விளையாட்டு போட்டி மல்யுத்தத்தில் சுஷில்குமார், ராகுல் தங்கம் வென்று அசத்தல்
x
தினத்தந்தி 12 April 2018 9:30 PM GMT (Updated: 12 April 2018 9:02 PM GMT)

காமன்வெல்த் விளையாட்டு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் சுஷில்குமார், ராகுல் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்கள்.

கோல்டுகோஸ்ட், 

காமன்வெல்த் விளையாட்டு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் சுஷில்குமார், ராகுல் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்கள்.

ராகுல் தங்கம் வென்றார்

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் 8-வது நாளான நேற்றும் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்தது.

மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான பிரீஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ராகுல் அவாரே இறுதி சுற்றில் 15-7 என்ற புள்ளி கணக்கில் கனடாவின் ஸ்டீவன் தகாஹாஷியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். மராட்டியத்தை சேர்ந்த 26 வயதான ராகுல் அவாரே காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வெல்வது இது முதல்முறையாகும்.

சுஷில்குமாரின் அசத்தல் தொடருகிறது

74 கிலோ எடைப்பிரிவில் எதிர்பார்த்தபடியே இந்திய வீரர் சுஷில்குமார் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் (2008-ல் வெண்கலம், 2012-ல் வெள்ளி) வென்றவரான சுஷில்குமார் இறுதி சுற்றில் தென்ஆப்பிரிக்க வீரர் ஜோஹனஸ் போத்தாவை 1 நிமிடம் 20 வினாடியில் பந்தாடினார். 10 புள்ளிகள் குவித்த சுஷில்குமார் எதிராளியை ஒரு புள்ளி கூட எடுக்க அனுமதிக்கவில்லை. முந்தைய சுற்றுகளில் சுஷில்குமார், பல்போர் ஜீவன் (கனடா), முகமது ஆசாத் பட் (பாகிஸ்தான்), இவான்ஸ் கனோர் (ஆஸ்திரேலியா) ஆகியோரை அடுத்தடுத்து சாய்த்து இருந்தார். 34 வயதான சுஷில்குமார் தொடர்ச்சியாக 3-வது முறையாக காமன்வெல்த் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய வீராங்கனை பபிதா குமாரி போகத் இறுதி சுற்றில் 2-5 என்ற புள்ளி கணக்கில் கனடாவின் டியானா வெய்கெரிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். அரியானாவை சேர்ந்த 28 வயதான பபிதா 2010-ம் ஆண்டு போட்டியில் வெள்ளிப்பதக்கமும், 2014-ம் ஆண்டு போட்டியில் தங்கப்பதக்கமும் வென்றவர் ஆவார்.

வெண்கலம் வென்ற மங்கை

76 கிலோ எடைப்பிரிவில் 26 வயதான இந்திய வீராங்கனை கிரண் வெண்கலப்பதக்கம் வென்றார். அவர் வெண்கலப்பதக்கத்துக்கான சுற்றில் 10-0 என்ற புள்ளி கணக்கில் மொரிஷியஸ் வீராங்கனை கடோஸ்கியாவை வீழ்த்தினார். சர்வதேச போட்டியில் கிரண் சுவைத்த முதல் பதக்கம் இதுவாகும்.

தங்கப்பதக்கம் வென்ற ராகுல் அவாரே கருத்து தெரிவிக்கையில், ‘இந்த பதக்கத்துக்காக கடந்த 10 ஆண்டுகளாக காத்து இருந்தேன். எனது உணர்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இறுதியில் எனது கனவு நிறைவேறியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 2012-ம் ஆண்டில் மறைந்த எனது பயிற்சியாளருக்கு இந்த பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன்’ என்றார்.

தங்கப்பதக்கத்தை தவற விட்ட பபிதா குமாரி போகத் அளித்த பேட்டியில், ‘இந்த பந்தயத்தில் எனது தாக்குதல் ஆட்டம் பலவீனமாக இருந்ததாக கருதுகிறேன். நான் இன்னும் ஆக்ரோஷமாக செயல்பட்டு இருக்க வேண்டும். இருப்பினும் எனது முழு திறனையும் வெளிப்படுத்தினேன். நான் விரும்பிய முடிவு எனக்கு கிடைக்கவில்லை. முழங்கால் காயமும் எனக்கு ஒரு சிறிய பிரச்சினையாக இருந்தது’ என்றார்.

மேலும் பதக்கங்கள்

பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (புரோன்) போட்டியில் மராட்டியத்தை சேர்ந்த 37 வயதான தேஜஸ்வினி சவாந்த் 618.9 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். சிங்கப்பூர் வீராங்கனை மார்ட்டினா லிண்ட்சே 621.0 புள்ளிகள் எடுத்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். முன்னாள் உலக சாம்பியனான தேஜஸ்வினி ஒட்டுமொத்தத்தில் காமன்வெல்த் போட்டியில் கைப்பற்றிய 6-வது பதக்கம் இதுவாகும்.

தடகள போட்டியில் பெண்களுக்கான வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை சீமா புனியா 60.41 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கமும், மற்றொரு இந்திய வீராங்கனை நவ்ஜீத் தில்லான் 57.43 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கமும் பெற்றனர். ஆஸ்திரேலிய வீராங்கனை டானி ஸ்டீவன்ஸ் 68.26 மீட்டர் தூரம் வட்டு எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார்.

அரியானாவை சேர்ந்த 34 வயதான சீமா புனியா காமன்வெல்த் விளையாட்டில் வென்ற 4-வது பதக்கம் இதுவாகும். 2006 மற்றும் 2014-ம் ஆண்டில் வெள்ளிப்பதக்கமும், 2010-ம் ஆண்டில் வெண்கலப்பதக்கமும் வென்று இருந்தார்.

ஆஸ்திரேலியா முன்னிலை

ஆண்களுக்கான ‘டிரிபிள் ஜம்ப்’ பந்தயத்தில் இந்திய வீரர்கள் அர்பிந்தர் சிங் (16.39 மீட்டர்), ராகேஷ் பாபு (15.98 மீட்டர்) ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள். பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனைகள் நெல்லிக்கெல் நீனா (6.19 மீட்டர்) 9-வது இடமும், நயனா ஜேம்ஸ் 12-வது இடமும் பெற்றனர்.

ஒரேநாளில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கத்தை அறுவடை செய்தது. நேற்றைய போட்டிகள் முடிவில் பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா 63 தங்கம், 46 வெள்ளி, 47 வெண்கலப்பதக்கத்துடன் முதலிடமும், இங்கிலாந்து 28 தங்கம், 32 வெள்ளி, 27 வெண்கலப்பதக்கத்துடன் 2-வது இடமும், இந்தியா 14 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலப்பதக்கத்துடன் 3-வது இடமும் வகிக்கின்றன.

Next Story