காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள், பயிற்சியாளருக்கு ரூ.4 கோடி ஊக்கத்தொகை


காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள், பயிற்சியாளருக்கு ரூ.4 கோடி ஊக்கத்தொகை
x
தினத்தந்தி 24 April 2018 9:15 PM GMT (Updated: 24 April 2018 8:51 PM GMT)

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று அசத்திய தமிழக வீரர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்களுக்கு மொத்தம் ரூ.4½ கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் நேற்று வழங்கினார்.

சென்னை, 

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று அசத்திய தமிழக வீரர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்களுக்கு மொத்தம் ரூ.4½ கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் சமீபத்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று சாதித்த தமிழக வீரர்-வீராங்கனைகள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்களுக்கு எஸ்.டி.ஏ.டி. சார்பில் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வீரர்களுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்கி பாராட்டினார்.

பளுதூக்குதலில் 77 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற எஸ்.சதீஷ்குமாருக்கு ஊக்கத் தொகையாக 50 லட்சம் ரூபாயும், டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிகள் பிரிவில் தங்கப்பதக்கமும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் வென்ற ஏ.சரத்கமலுக்கு ஒரு கோடி ரூபாயும், டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிகள் பிரிவில் தங்கப்பதக்கமும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் வென்ற ஜி.சத்யனுக்கு ஒரு கோடி ரூபாயும், டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிகள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற அ.அமல்ராஜூக்கு 50 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.

ரூ.4½ கோடி ஊக்கத்தொகை

இதே போல் ஸ்குவாஷ் போட்டியில் கலப்பு இரட்டையர் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கங்கள் வென்ற தீபிகா பலிக்கலுக்கு 60 லட்சம் ரூபாயும், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற சவுரவ் கோஷலுக்கு 30 லட்சம் ரூபாயும், பதக்கங்கள் வென்ற வீரர்களின் பயிற்சியாளர்கள் 8 பேருக்கு ஊக்கத் தொகையாக 54 லட்சம் ரூபாயும் என மொத்தம் 4 கோடியே 44 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர் உள்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். இந்த தகவல் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story