பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி: ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார் தருண், சுதா சிங், நீனாவுக்கு வெள்ளிப்பதக்கம் + "||" + Asian Games Contest Neeraj Chopra won gold Tarun, Sudha Singh, Nina is silver

ஆசிய விளையாட்டு போட்டி: ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார் தருண், சுதா சிங், நீனாவுக்கு வெள்ளிப்பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டி: ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார் தருண், சுதா சிங், நீனாவுக்கு வெள்ளிப்பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டி தடகளத்தில் நேற்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார். இந்திய வீரர் தருண், வீராங்கனைகள் சுதா சிங், நீனா வராகில் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.
ஜகர்தா,

ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் தடகளத்தில் நேற்று இந்தியாவுக்கு மகிழ்ச்சிக்குரிய நாளாக அமைந்தது. ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.06 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்தார். சீன வீரர் கியூஷன் லியு 82.22 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கமும், பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் நதீம் 80.75 மீட்டர் தூரம் வீசி வெண்கலப்பதக்கமும் பெற்றனர். மற்றொரு இந்திய வீரரான ஷிவ்பால்சிங் 74.11 மீட்டர் தூரம் வீசி 8-வது இடமே பிடித்தார்.


தொடக்க விழா அணிவகுப்பில் தேசிய கொடியேந்தி இந்திய அணிக்கு தலைமை தாங்கிய அரியானாவை சேர்ந்த 20 வயதான நீரஜ் சோப்ரா எதிர்பார்த்தது போல் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ஆசிய விளையாட்டு போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் ஒருவர் தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு கடைசியாக 1982-ம் ஆண்டில் இந்திய வீரர் குர்தேஜ்சிங் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார். இந்த போட்டி தொடரில் குண்டு எறிதலில் இந்திய வீரர் தஜிந்தர் பால்சிங் 2 நாட்களுக்கு முன்பு தங்கம் வென்று இருந்தார். ஒரு ஆசிய விளையாட்டு போட்டியில் குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். நீரஜ் சோப்ரா இந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலும், 2017-ம் ஆண்டு நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும், 2016-ம் ஆண்டு நடந்த உலக ஜூனியர் தடகள போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்று இருந்தார்.

ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீரர் தருண் 48.96 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். கத்தார் வீரர் ஆப்டெரக்மான் சம்பா 47.66 வினாடியில் கடந்து தங்கப்பதக்கமும், ஜப்பான் வீரர் அபே டகாடோஷி 49.12 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினார்கள். மற்றொரு இந்திய வீரர் சந்தோஷ்குமார் 5-வது இடம் பெற்றார்.

21 வயதான தருண் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். பெரிய சர்வதேச போட்டியில் அவர் வென்ற முதல் பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு கவுகாத்தியில் நடந்த தெற்காசிய விளையாட்டு போட்டியில் தருண் தங்கம் வென்று இருந்தார். ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சேத்தன் 8-வது இடம் பெற்று ஏமாற்றம் கண்டார்.

பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை நீனா வராகில் 6.51 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை கபளகரம் செய்தார். வியட்நாம் வீராங்கனை தி ஹூ தாவ் புய் 6.55 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்தையும், சீன வீராங்கனை ஜியாலிங் சூ 6.50 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தையும் தனதாக்கினர். 27 வயதான நீனா வராகில் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். மற்றொரு இந்திய வீராங்கனை நயனா 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பந்தயத்தில் இந்திய வீராங்கனை சுதா சிங் 9 நிமிடம் 40.03 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கத்தை அறுவடை செய்தார். பக்ரைன் வீராங்கனை வின்பிரட் யாவி 9 நிமிடம் 36.52 வினாடியில் கடந்து தங்கப்பதக்கமும், வியட்நாம் வீராங்கனை தி ஒன் நிகுயின் 9 நிமிடம் 43.83 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் பெற்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை சிண்டா 11-வது இடத்துக்கு ஓரங்கட்டப்பட்டார். 32 வயதான சுதா சிங் உத்தரபிரதேச மாநிலத்துக்காரர். பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அனு 4-வது இடமும், ஜானா முர்மு 5-வது இடமும் பெற்றனர்.