து ளி க ள்


து ளி க ள்
x
தினத்தந்தி 19 Dec 2018 9:30 PM GMT (Updated: 19 Dec 2018 8:35 PM GMT)

பெண்களுக்கான பிக்பாஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பிரிஸ்பேனில் நேற்று நடந்த 21–வது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ்–பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின.

* பெர்த் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற பிறகு அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் அளித்த ஒரு பேட்டியில், ‘பெர்த் டெஸ்ட் போட்டி முடிந்ததும் கேப்டன்களான விராட்கோலியும், டிம் பெய்னும் மைதானத்தில் ஒருவருக்கொருவர் கை குலுக்கினார்கள். கைகுலுக்கும் போது டிம் பெய்ன் விராட்கோலியின் முகத்தை பார்த்த படி கைகுலுக்கினார். ஆனால் விராட்கோலி, டிம் பெய்னின் முகத்தை பார்க்காமல் கடமைக்கு கைகுலுக்கியது போல் தெரிந்தது. என்னை பொறுத்தமட்டில் இது மிகவும் அவமரியாதைக்குரிய செயலாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

* மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 31–ந் தேதி முதல் ஜனவரி 5–ந் தேதி வரை புனேயில் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவிஜ் சரண்–ரோகன் போபண்ணா ஜோடிக்கு போட்டி தரவரிசையில் முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஒற்றையர் பிரிவில் கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), மரின் சிலிச் (குரோஷியா), நடப்பு சாம்பியன் ஜிலெஸ் சிமோன் (பிரான்ஸ்) ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

* தங்களுடன் இரு தரப்பு தொடரில் விளையாட மறுத்ததற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.447 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்த வழக்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தீர்ப்பாய கமிட்டி கடந்த மாதம் 20–ந் தேதி தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து இந்த வழக்குக்காக செலவு செய்த தொகையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களுக்கு தர வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் முறையிடப்பட்டது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த வழக்குக்கு செலவிட்ட தொகையில் 60 சதவீதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்க வேண்டும் என்று ஐ.சி.சி. நேற்று உத்தரவிட்டது. இதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சுமார் ரூ.14 கோடியை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு செலுத்த வேண்டியது இருக்கும். அதேபோல் இந்த விவகாரத்தை கையாள தீர்ப்பாயத்துக்கு ஆன செலவில் 40 சதவீதத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் அளிக்க வேண்டும் என்றும் ஐ.சி.சி. அறிவுறுத்தி உள்ளது. ஆனால் அந்த தொகை எவ்வளவு என்பது குறிப்பிடப்படவில்லை.

* 64–வது தேசிய பள்ளி விளையாட்டில் தடகள போட்டிகள் டெல்லியில் நடந்தது. இதில் தமிழக வீராங்கனை பி.எம். தபிதா 100 மீட்டர் தடை ஓட்டத்தில் புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். அவர் மேலும் டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் தங்கப்பதக்கமும், நீளம் தாண்டுதல் மற்றும் 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் வென்றார். தபிதா சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளர் பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.

* பெண்களுக்கான பிக்பாஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பிரிஸ்பேனில் நேற்று நடந்த 21–வது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ்–பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்து மெல்போர்ன் அணி நிர்ணயித்த 133 ரன் இலக்கை பிரிஸ்பேன் அணி 10.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்தது. பிரிஸ்பேன் அணி வீராங்கனை கிரேஸ் ஹாரிஸ் 42 பந்துகளில் 101 ரன்கள் (13 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினார். பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் இது 2–வது அதிவேக சதமாக பதிவானது. இதற்கு முன்பு வெஸ்ட்இண்டீசின் டியோந்திர டோட்டின் 38 பந்துகளில் சதம் அடித்ததே உலக சாதனையாக உள்ளது.


Next Story