பதக்கங்களை குவிக்கும் நீச்சல் வீரர்


பதக்கங்களை குவிக்கும் நீச்சல் வீரர்
x
தினத்தந்தி 25 May 2019 11:31 AM GMT (Updated: 25 May 2019 11:31 AM GMT)

ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வாங்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார்

இந்தியாவிற்காக ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார், துபாய் தமிழ் மாணவர் விசேஷ் பரமேஸ்வர் சர்மா (வயது 13 ). இவர் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தை பூர்வீகமாக கொண்டவர். தற்போது குடும்பத்தினரோடு துபாயில் வாழ்ந்து வருகிறார்.

‘‘எனக்கு ஆரம்பத்தில் தண்ணீர் என்றாலே பயம். குறிப்பாக நீந்துவது என்பது, கடும் சவாலான காரியமாக இருந்தது. இருப்பினும் அப்பா பரமேஸ்வர் சர்மா, அம்மா ரேணுகா ஆகியோர் நீச்சல் பயிற்சியின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுத்தனர். நீச்சல் பயிற்சிதான், மற்ற விளையாட்டுகளுக்கு அடிப்படை என்பதையும் உணர்த்தினர். அதன் அடிப்படையில்தான் நீச்சல் பயிற்சி பெற்றேன். மெதுவாக நீந்த கற்றுக்கொண்டு, இன்று நீச்சல் போட்டிகளில் பரிசுகளை வெல்லும் அளவிற்கு உயர்ந்திருக்கிறேன். நீச்சல் போட்டிகளில் பரிசுகள் குவிகின்றன என்பதை தாண்டி, என்னை பயமுறுத்திய நீரில், கடும் சவாலாக திகழ்ந்த நீச்சல் பயிற்சியில் பரிசுகளை வெல்கிறேன் என்பதுதான், என்னை ஆச்சரியப்படுத்துகிறது’’ என்பவர், நீச்சல் பயிற்சியில் கிடைத்த பரிசுகளை கூறினார்.

‘‘தமிழ்நாடு நீச்சல் சங்கம் சென்னையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை நடத்திய போட்டியில் 4 தங்க பதக்கங்களை வென்றேன். 100 மீட்டர் பின்னோக்கி நீந்துதல், 100 மீட்டர் முன்நோக்கி நீந்துதல், அதேபோல் 50 மீட்டர் முன்நோக்கி மற்றும் பின்நோக்கி நீந்துதல் ஆகிய 4 பிரிவுகளில் இலக்கை வெகுவிரைவாக எட்டிப்பிடித்து, தங்கப்பதக்கங்களை வென்றேன். அதேபோல இந்திய நீச்சல் கூட்டமைப்பு புனேயில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்திய நீச்சல் போட்டியிலும் தேசிய சாதனையோடு பரிசுகளை வென்றேன். இம்முறை 50 மீட்டர் பிரிவில் பின்நோக்கி நீந்துதலில் தங்கம் கிடைத்தது. 30.72 நொடிகளில் இலக்கை எட்டிப்பிடித்தது, புதிய தேசிய சாதனையாகவும் அமைந்தது’’ என்கிறார், விசேஷ்.

இவர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி நடந்த போட்டியில் 200 மீட்டர் பிரிவில் 2.15. என்ற நிமிட கணக்கில் நீந்தி, கடந்த 25 வருட சாதனையை முறியடித்துள்ளார். அதேபோல 100 மீட்டர் பிரிவிலும் புதிய சாதனையை படைத்துள்ளார். மேலும் 50 மீட்டர் பிரிவிலும் மூன்று போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

‘‘நீச்சல் போட்டிகளில் வேகமாக நீந்தி, பல பரிசுகளை வென்றாலும், ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்காக பதக்கம் வெல்வதே என்னுடைய கனவாக இருக்கிறது. அதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். என்னுடைய ஆசை, வெகுவிரைவிலேயே நிறை வேறும்’’ என்று நம்பிக்கையோடு முடிக்கும் விசேஷ், துபாயில் உள்ள இந்திய பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு இசிதா என்ற தங்கையும் உள்ளார்.

விசேஷ் நீச்சல் மட்டுமின்றி குதிரையேற்றம், கால்பந்து, பேட்மிண்டன் ஆகிய போட்டிகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்கிறார். அதில் சில விளையாட்டுகளில் பல வெற்றிகளையும் குவித்திருக்கிறார்.


Next Story