பார்முலா1 கார்பந்தயம்: மொனாக்கோ போட்டியில் ஹாமில்டன் முதலிடம்


பார்முலா1 கார்பந்தயம்: மொனாக்கோ போட்டியில் ஹாமில்டன் முதலிடம்
x
தினத்தந்தி 26 May 2019 8:32 PM GMT (Updated: 26 May 2019 8:32 PM GMT)

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

மான்ட்கார்லோ, 

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 6-வது சுற்று போட்டியான மொனாக்கோ கிராண்ட்பிரி பந்தயம் மான்ட் கார்லோவில் உள்ள ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இதில் 260.286 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி வழக்கம் போல் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப் பாய்ந்தனர். முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட 5 முறை சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 43 நிமிடம் 28.437 வினாடிகளில் முதலாவதாக வந்து 25 புள்ளிகளை தட்டிச் சென்றார். இந்த சீசனில் அவரது 4-வது வெற்றி இதுவாகும். அவரை விட 2.602 வினாடி மட்டுமே பின்தங்கிய முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 2-வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார். வால்டெரி போட்டாஸ் (பின்லாந்து) 3-வது இடத்தை பிடித்தார்.

சமீபத்தில் மரணம் அடைந்த முன்னாள் பார்முலா1 கார்பந்தய சாம்பியன் ஆஸ்திரியாவைச் சேர்ந்த நிகி லாதாவின் பெயரை தனது ஹெல்மெட்டில் பொறித்துக் கொண்டு போட்டியில் கலந்து கொண்ட ஹாமில்டன் வெற்றியை அவருக்கே சமர்ப்பித்தார்.

இதுவரை நடந்துள்ள 6 சுற்று முடிவில் ஹாமில்டன் 137 புள்ளிகளுடன் முதலிடத்திலும், போட்டாஸ் 120 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். அடுத்த சுற்று போட்டி வருகிற 9-ந்தேதி கனடாவில் நடக்கிறது.

Next Story