‘ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது கடினம்’- டுட்டீ சந்த்


‘ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது கடினம்’- டுட்டீ சந்த்
x
தினத்தந்தி 19 March 2020 12:06 AM GMT (Updated: 19 March 2020 12:06 AM GMT)

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது கடினம் என டுட்டீ சந்த் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீராங்கனையான ஒடிசாவைச் சேர்ந்த டுட்டீ சந்த் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக பயிற்சி மேற்கொள்ள கடந்த 2-ந் தேதி ஜெர்மனி செல்ல முடிவு செய்து இருந்தேன். அங்கு பலம் வாய்ந்த ஐரோப்பிய போட்டியாளர்களுடன் ஓடி பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டேன். அதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம் என்று நம்பினேன். தற்போது எனது அனைத்து திட்டங்களும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வீணாகி விட்டது. ஜெர்மனி செல்ல விசா உள்பட அனைத்து பயண ஏற்பாடுகளையும் செய்து இருந்தேன். ஆனால் கொரோனா பரவலால் பயிற்சிக்கு வரவேண்டாம் என்ற தகவல் பயிற்சி மையத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் நான் மிகவும் ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறேன்.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேனா என்று கவலையாக இருக்கிறது. 100 மீட்டர் ஓட்டத்தில் 11.15 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது என்பது கடினமானது. ஐரோப்பாவில் சிறந்த போட்டியாளர்கள் உள்ளனர். அவர்களுடன் பயிற்சி மேற்கொள்ளும் போது, நமது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். ஆனால் இங்கு (இந்திய கிராண்ட்பிரி) 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெறும் 5 வீராங்கனைகள் மட்டுமே ஓடுவார்கள். பெரிய அளவில் சவால் இருக்காது. ஆனாலும் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற முடியும் என்று இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்திய கிராண்ட்பிரி மற்றும் பெடரேசன் கோப்பை போட்டியின் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முயற்சிப்பேன்.

இவ்வாறு டுட்டீ சந்த் கூறினார்.

Next Story