‘உலக பேட்மிண்டன் தரவரிசை புள்ளியை நிறுத்திவைக்க வேண்டும்’ - இந்திய வீரர்கள் கோரிக்கை


‘உலக பேட்மிண்டன் தரவரிசை புள்ளியை நிறுத்திவைக்க வேண்டும்’ - இந்திய வீரர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 26 March 2020 12:18 AM GMT (Updated: 26 March 2020 12:18 AM GMT)

உலக பேட்மிண்டன் தரவரிசை புள்ளியை நிறுத்திவைக்க வேண்டும் என்று இந்திய வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் அச்சத்தால் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டனுக்கு பிறகு எந்தவொரு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளும் நடக்கவில்லை. அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. பேட்மிண்டனில் ஏப்ரல் 28-ந் தேதி வரை ஒலிம்பிக் தகுதிசுற்று காலகட்டமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. 

அதை நீட்டிக்க சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் மறுத்துவிட்ட நிலையில் இப்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் பேட்மிண்டன் சம்மேளனத்தின் சில முடிவுகளை இந்திய வீரர் சாய் பிரனீத் விமர்சித்துள்ளார். 

உலக பேட்மிண்டனில் வெண்கலம் வென்றவரும், தரவரிசையில் 13-வது இடம் வகிப்பவருமான சாய் பிரனீத் கூறுகையில், ‘கொரோனா காரணமாக சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் பல போட்டிகளை தள்ளி வைத்துள்ளது. போட்டி இல்லாவிட்டாலும் கூட எங்களது தரவரிசை புள்ளிகள் குறைக்கப்படுகிறது. தள்ளிவைக்கப்பட்ட எல்லா ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகளுக்காக இது போன்று தொடர்ந்து தரவரிசை புள்ளியை குறைத்தால் அடுத்து என்ன நடக்கும் என்பதே தெரியவில்லை. 

தற்போது ஒலிம்பிக் போட்டி தள்ளி போடப்பட்டு இருப்பதால் குறைந்தது தரவரிசை புள்ளிகளையாவது அப்படியே நிறுத்தி வைக்க வேண்டும். திட்டமிட்டபடி ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஒலிம்பிக் போட்டி நடந்திருந்தால் தரவரிசை அடிப்படையில் (டாப் 16 தரவரிசையில் உள்ளவர்கள் தகுதி) முதல்முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருப்பேன். 

ஆனால் டோக்கியோ ஒலிம்பிக் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதால் தகுதி சுற்று நடைமுறைகள் மீண்டும் தொடங்கும். தரவரிசையில் முன்னேற்றம் காண மறுபடியும் நான் போராட வேண்டி இருக்கும்.ஓராண்டுக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை சொல்ல முடியாது’ என்றார்.

இதற்கிடையே, உலக தரவரிசை புள்ளியை நிறுத்தி வைப்பது குறித்தும், ஒலிம்பிக் தகுதி பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காண்பது பற்றியும் பரிசீலிக்க சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story