இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் நடந்த வாய்ப்பில்லை - ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்


இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் நடந்த வாய்ப்பில்லை - ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்
x
தினத்தந்தி 29 April 2020 10:15 PM GMT (Updated: 29 April 2020 6:50 PM GMT)

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் திட்டமிட்டபடி நடந்த வாய்ப்பில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.


*மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அளித்த ஒரு பேட்டியில், ‘2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில், பதக்கப்பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் வருவதே இந்தியாவின் லட்சியம். இது முடியாதது அல்ல. இதற்காக திறமையான இளம் வீரர்களை அடையாளம் காணும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது’ என்றார்.

*ஐக்கிய அரபு அமீரகத்தில் 2018-ம் ஆண்டு நடந்த 10 ஓவர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற அணிகளில் ஒன்றான சிந்திஸ் அணியின் உரிமையாளர் இந்திய தொழிலதிபர் தீபக் அகர்வால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் சிக்கினார். இது குறித்து விசாரித்த ஐ.சி.சி. அவருக்கு கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்க நேற்று 2 ஆண்டு தடை விதித்தது.

*அமெரிக்க ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்தியாவைச் சேர்ந்த அருண்குமார் 2 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்கப்பட்டு உள்ளார். கர்நாடக அணியின் முன்னாள் கேப்டனான 45 வயதான அருண்குமார், 109 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர் ஆவார்.

*உடல் நலக்குறைவால் மும்பையில் நேற்று மரணம் அடைந்த இந்தி நடிகர் இர்பான் கானின் மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி, ஷேவாக், ரெய்னா, ஷிகர் தவான், முகமது ஷமி, முகமது கைப் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஸ்காட்லாந்தில் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியிலும்(ஜூன் 29-ந்தேதி), ஜூலை 3-ந்தேதி முதல் இங்கிலாந்தில் அந்த அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட திட்டமிட்டு இருந்தது. கொரோனா பரவி வரும் நிலையில் இந்த தொடர் திட்டமிட்டபடி நடத்தப்பட வாய்ப்பில்லை என்று ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

*தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் இறுதி சுற்று மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கில் மே மாதம் நடக்க இருந்த இந்த போட்டி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஆகஸ்டுக்கு மாற்றப்பட்டது. தற்போது அக்டோபர் 3-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story