மாநில அளவிலான கபடி போட்டி தொடக்கம்


மாநில அளவிலான கபடி போட்டி தொடக்கம்
x
தினத்தந்தி 9 Jan 2022 6:45 PM GMT (Updated: 9 Jan 2022 6:45 PM GMT)

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் கபடி போட்டி தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் எதிர்எதிரே களம் இறங்கி மோதிக்கொண்டனர்.

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் கபடி போட்டி தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் எதிர்எதிரே களம் இறங்கி மோதிக்கொண்டனர்.
கபடி போட்டி
புதுவை பா.ஜ.க. சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடக்கிறது. ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார், பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கர் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
சபாநாயகர்-அமைச்சர் மோதல்
கபடி போட்டி தொடக்க விழாவில் சபாநாயகர் செல்வம் ஒரு அணியிலும், மற்றொரு அணியில் அமைச்சர் நமச்சிவாயம் களம் இறங்கி விளையாடினர். அப்போது அவர்கள் இருவரும் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களத்தில்  கபடி பாடி சென்று இளைஞர்களை உற்சாகப்படுத்தினர். 
இதனை அங்கு திரண்டிருந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் கரகோசம் எழுப்பினர். மேலும் சிலர் அதனை செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பரவ விட்டுள்ளனர்.
ரூ.3 லட்சம் பரிசு
கபடி போட்டியில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் இருந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. அதன்படி ஆண்கள் பிரிவில் 12 அணிகளும், பெண்கள் பிரிவில் 16 அணிகளும் கலந்துகொண்டன. இப்போட்டி வருகிற 11-ந் தேதி வரை நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறும் முதலிடத்தை பிடிக்கும் ஆண்கள் அணிக்கு ரூ.3 லட்சமும், 2-ம் இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.1½ லட்சமமு், 3-ம் இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.1 லட்சமும் பரிசாக வழங்கப்படுகிறது.
அதேபோல் பெண்கள் பிரிவில் முதலிடத்தை பிடிக்கும் பெண்கள் அணிக்கு ரூ.50 ஆயிரமும், 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.30 ஆயிரமும், 3-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 ஆயிரமும் பரிசாக அளிக்கப்படுகிறது.
கிரிக்கெட்டி போட்டி
தாகூர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மற்றொரு பகுதியில் பா.ஜ.க. இளைஞர் அணி சார்பில், 10 ஓவர் கிரிக்கெட் போட்டி நாக் அவுட் முறையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் புதுவையை சேர்ந்த 64 அணிகள் பங்கேற்றுள்ளன. அதன்படி நேற்று முன்தினம் 11 போட்டிகள் நடந்தது. 2-ம் நாளான நேற்று 11 போட்டிகள்     நடந்தன.     வருகிற 12-ந்தேதி வரை போட்டிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

Next Story