இந்திய ஓபன் பேட்மிண்டனில் பங்கேற்ற ஸ்ரீகாந்த், அஸ்வினி உள்பட 7 இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு கொரோனா


இந்திய ஓபன் பேட்மிண்டனில் பங்கேற்ற ஸ்ரீகாந்த், அஸ்வினி உள்பட 7 இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 Jan 2022 2:38 AM GMT (Updated: 14 Jan 2022 2:38 AM GMT)

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற ஸ்ரீகாந்த், அஸ்வினி உள்பட 7 இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மொத்தம் ரூ.3 கோடி பரிசுத் தொகைக்கான இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. ரசிகர்கள் அனுமதியின்றி கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த போட்டி அரங்கேறி வருகிறது.

இந்த போட்டியில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகளுக்கு தினசரி கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. முதல் நாளில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில், சமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் ஸ்ரீகாந்த், இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை அஸ்வினி, இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத், இந்திய வீராங்கனைகள் ரிதிகா ராகுல் தாக்கர், தெரசா ஜாலி, சிம்ரன் அமன் சிங், குஷி குப்தா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று அதிகாலை தெரியவந்தது. 

இதையடுத்து அவர்கள் அனைவரும் போட்டியில் இருந்து விலகினர். தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வீரர், வீராங்கனைகளுடன் இரட்டையர் பிரிவில் இணைந்து விளையாடிய சிக்கி ரெட்டி, துருவ் கபிலா, காயத்ரி கோபிசந்த், அக்‌ஷன் ஷெட்டி, காவ்யா குப்தா ஆகிய 5 பேரும் போட்டியில் இருந்து ஒதுங்கி இருக்கின்றனர். 

அவர்களுக்கு பரிசோதனையில் கொரோனா இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்து இருந்தாலும், பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த காரணத்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விலகிய வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் களம் இறக்கப்படமாட்டார்கள் என்றும், கொரோனாவினால் பாதித்தவர்களை எதிர்கொள்ள இருந்த வீரர்கள் போட்டியின்றி அடுத்த சுற்றுக்கு செல்வார்கள் என்றும் சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் கூறியுள்ளது.

போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய வீரர்கள் சாய் பிரனீத், மனு அட்ரி, துருவ் ராவத் ஆகியோர் கொரோனா பாதிப்பால் போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதே போல் இரட்டையர் பிரிவில் பங்கேற்க இருந்த வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.


Next Story