ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து 'நம்பர் ஒன்' வீரர் அல்காரஸ் விலகல்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து நம்பர் ஒன் வீரர் அல்காரஸ் விலகல்
x

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து ‘நம்பர் ஒன்’ வீரர் அல்காரஸ் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கிறார்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் வருகிற 16-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது. அமெரிக்க ஓபன் சாம்பியனும், உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவருமான 19 வயது ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து நேற்று விலகி இருக்கிறார். இது குறித்து கார்லோஸ் அல்காரஸ் தனது டுவிட்டர் பதிவில், 'பயிற்சியின் போது வழக்கத்துக்கு மாறாக திரும்புகையில் எனது வலதுகால் தசையில் காயம் ஏற்பட்டதால் துரதிருஷ்டவசமாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் என்னால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது கடினமான ஒன்றாகும். காயத்தில் இருந்து மீண்டு விரைவில் களம் திரும்புவேன் என்று நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், ஒற்றையர் பிரிவில் 7 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான 42 வயது அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு போட்டியில் பங்கேற்க வைல்டு கார்டு வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது.


Next Story