ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்: ஜோகோவிச்சின் ஆதிக்கம் தொடருமா?


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்: ஜோகோவிச்சின் ஆதிக்கம் தொடருமா?
x

Image Courtesy: Wimbledon twitter

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் இன்று தொடங்குகிறது.

மெல்போர்ன்,

டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் இன்று தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரரும், 24 கிராண்ட்ஸ்லாம் வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலிய ஓபனை 10 முறை கைப்பற்றி சாதனையாளராக திகழ்கிறார். மற்ற வீரர்களில் யாரும் 6 தடவைக்கு மேல் வென்றதில்லை. தனது முதல் ரவுண்டில், தகுதி போட்டியின் மூலம் பிரதான சுற்றை எட்டிய 178-ம் நிலை வீரரான டினோ பிரைஸ்மிக்கை (குரோஷியா) சந்திக்கும் ஜோகோவிச் கால்இறுதியில் கிரீசின் சிட்சிபாசுடன் மோத வேண்டி வரலாம்.

காயம் காரணமாக முன்னாள் சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) விலகிய நிலையில், 2-ம் நிலை வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), டேனில் மெட்விடேவ் (ரஷியா), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), ஜானிக் சினெர் (இத்தாலி), அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா), ஹோல்ஜர் ருனே (டென்மார்க்), ஹர்காக்ஸ் (போலந்து) உள்ளிட்டோர் ஜோகோவிச்சின் வீறுநடைக்கு முட்டுக்கட்டை போட வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கப்போகிறது. 'இளம் புயல்' அல்காரஸ் முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் கேஸ்கியூட்டுடன் மோதுகிறார்.

பெண்கள் பிரிவிலும் பட்டம் வெல்ல நட்சத்திர வீராங்கனைகள் மல்லுகட்டுகிறார்கள். 'நம்பர் ஒன்' வீராங்கனையான இகா ஸ்வியாடெக்குக்கு (போலந்து) முதல் சுற்றே கடும் சவாலாக அமைந்துள்ளது. அவர் முன்னாள் சாம்பியன் சோபியா கெனினுடன் (அமெரிக்கா) மோதுகிறார். 6-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் கால்பதிக்கும் ஸ்வியாடெக் அரைஇறுதிக்கு மேல் தாண்டியதில்லை. இந்த முறை கோப்பை ஏக்கத்தை தணிக்கும் உத்வேகத்துடன் தன்னை தயார்படுத்தியுள்ளார். நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை வீராங்கனையுமான அரினா சபலென்கா (பெலாரஸ்) தனது முதல் ரவுண்டில் ஜெர்மனியின் எலா செய்டெலை எதிர்த்து ஆடுகிறார்.

எலினா ரைபகினா (கஜகஸ்தான்), கோகோ காப், ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்), நவோமி ஒசாகா (ஜப்பான்), வோன்ட்ரோசோவா (செக்குடியரசு), மரியா சக்காரி (கிரீன்ஸ்) ஆகியோரும் வெற்றி வாய்ப்பில் ஓடுகிறார்கள்.

போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.480 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.17½ கோடியும், 2-வது இடம் பிடிப்போருக்கு ரூ.9½ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் வெல்லும் ஜோடிக்கு ரூ.4 கோடி கிடைக்கும்.

இந்த டென்னிஸ் திருவிழா இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் டென்5 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. முதல் நாளில் ஜோகோவிச், சபலென்கா, ஜானிக் சினெர், மரியா சக்காரி உள்ளிட்டோர் களம் இறங்குகிறார்கள்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தகுதி சுற்றின் கடைசி நாளான நேற்று முன்தினம் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சுமித் நாகல் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் சுலோவக்கியாவின் அலெக்ஸ் மால்கேனை வீழ்த்தி பிரதான சுற்றுக்குள் நுழைந்தார். 2021-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய ஓபனில் பிரதான சுற்றை அடைந்துள்ள தரவரிசையில் 139-வது இடம் வகிக்கும் சுமித் நாகல், முதல் சுற்றில் 31-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் பப்ளிக்கை (கஜகஸ்தான்) எதிர்கொள்கிறார். இரட்டையர் பிரிவில் இந்திய தரப்பில் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டெனுடன் ஜோடி சேர்ந்து களம் இறங்குகிறார்.


Next Story