ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சபலென்கா, எலினா ரைபகினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சபலென்கா, எலினா ரைபகினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்கா, எலினா ரைபகினா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

மெல்போர்ன்,


'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு விம்பிள்டன் சாம்பியனும், தரவரிசையில் 25-வது இடத்தில் இருப்பவருமான எலினா ரைபகினா (கஜகஸ்தான்), முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும் 2 முறை சாம்பியனுமான விக்டோரியா அஸரென்காவை (பெலாரஸ்) எதிர்கொண்டார்.

1 மணி 41 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் எலினா ரைபகினா 7-6 (7-4), 6-3 என்ற நேர்செட்டில் விக்டோரியா அஸரென்காவுக்கு அதிர்ச்சி அளித்து கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். முந்தைய சுற்றுகளில் எலினா ரைபகினா நம்பர் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), ஆஸ்டாபென்கோ (லாத்வியா), டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா) ஆகிய முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு அரைஇறுதியில் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, 45-வது இடத்தில் உள்ள மாக்டா லினெட்டை (போலந்து) சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சபலென்கா 7-6 (7-1), 6-2 என்ற நேர்செட்டில் மாக்டா லினெட்டை விரட்டியடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் கால் பதித்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 33 நிமிடம் தேவைப்பட்டது.

வெற்றிக்கு பிறகு சபலென்கா கூறுகையில், 'இந்த வெற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நம்பமுடியாத வீராங்கனையான லினெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டியை நான் சரியாக தொடங்கவில்லை. ஆனால் டைபிரேக்கரில் இருந்து நல்ல நிலைக்கு திரும்பினேன்' என்றார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா-எலினா ரைபகினா பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

சானியா ஜோடி பட்டம் வெல்லுமா?

இன்று நடைபெறும் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-ரோகன் போபண்ணா ஜோடி, பிரேசிலின் லூசா ஸ்டெபானி-ரபெல் மேட்டோஸ் இணையுடன் (இந்திய நேரம் காலை 6.30 மணி) மோதுகிறது. இதனை அடுத்து நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டங்களில் கரன் கச்சனோவ் (ரஷியா)-சிட்சிபாஸ் (கிரீஸ்), நோவக் ஜோகோவிச் (செர்பியா)-டாமி பால் (அமெரிக்கா) ஆகியோர் சந்திக்கின்றனர். இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story