ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: தொடக்க போட்டியில் காஸ்பர் ரூட் வெற்றி


ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: தொடக்க போட்டியில் காஸ்பர் ரூட் வெற்றி
x

Image Courtesy: AFP

முதல் போட்டியில் நார்வே நாட்டின் காஸ்பர் ரூட் மற்றும் கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் ஆகியோர் மோதினர்.

துரின்,

ஆண்டின் இறுதியில் ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஏ.டி.பி. இறுதி சுற்று உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் இன்று தொடங்கியது.

குரூப் சுற்று நவம்பர் 18 வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் தரவரிசையில் டாப்-8 இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். அவர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'ரவுண்ட்-ராபின்' முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

அந்த வகையில் இந்த முறை நோவக் ஜோகோவிச், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஆண்ட்ரே ரூப்லெவ் மற்றும் டேனியல் மெட்வெடேவ் ஆகியோர் 'ரெட்' பிரிவில் இடம்பெற்று உள்ளனர். 'கிரீன்' பிரிவில் ரபேல் நடால், காஸ்பர் ரூட், பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் மற்றும் டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் உள்ளனர்.

இதில் இன்று தொடங்கிய ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் நார்வே நாட்டின் காஸ்பர் ரூட் மற்றும் கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் ஆகியோர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் காஸ்பர் ரூட்7-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

நாளை நடக்கும் குரூப் சுற்றில் ரபேல் நடால்- டெய்லர் பிரிட்ஸ் மோதுகின்றனர். அதே நாளில் ரெட் பிரிவில் ரூப்லெவ் மற்றும் டேனியல் மெட்வெடேவ் மோதுகின்றனர். இந்த தொடரின் இறுதி போட்டி நவம்பர் 20 அன்று நடைபெறுகிறது.


Next Story