"இந்த நாள் வரக்கூடாது என்று விரும்பினேன்"- ரோஜர் பெடரர் ஓய்வு முடிவு குறித்து நடால் உருக்கம்


இந்த நாள் வரக்கூடாது என்று விரும்பினேன்- ரோஜர் பெடரர் ஓய்வு முடிவு குறித்து நடால் உருக்கம்
x

Image Courtesy: AFP 

டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுவீஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.

சென்னை,

சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். இன்று தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். முன்னாள் நம்பர் ஒன் வீரரான பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இதில் 8 விம்பிள்டன் மகுடமும் அடங்கும்.

தரவரிசையில் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர் என்ற சாதனைக்கும் ரோஜர் பெடரர் சொந்தக்காரர் ஆவார். 2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுவீஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரோஜர் பெடரருக்கு டென்னிஸ் ,கிரிக்கெட் நட்சத்திரங்கள் ரசிகர்கள் உட்பட பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரோஜர் பெடரருக்கு ஸ்பெயின் டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் உருக்கமான வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடால், "அன்புள்ள ரோஜர், நீங்கள் எனது நண்பர் மற்றும் போட்டியாளர். இந்த நாள் வரக்கூடாது என்று நான் விரும்பினேன். தனிப்பட்ட முறையில் எனக்கும், உலகம் முழுவதும் உள்ள விளையாட்டுகளுக்கும் இது ஒரு சோகமான நாள். களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல அற்புதமான தருணங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் பாக்கியம், மகிழ்ச்சி.

எதிர்காலத்தில் நாம் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ள இன்னும் பல தருணங்கள் இருக்கும். ஒன்றாகச் செய்ய இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. அது நமக்கு தெரியும். இப்போது உங்கள் மனைவி, உங்கள் குழந்தைகள், உங்கள் குடும்பத்தினருடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க நான் விரும்புகிறேன். உங்களை லண்டனில் சந்திக்கிறேன்," என தெரிவித்துள்ளார்.



Next Story