உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் மீண்டும் 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்தார்


உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்
x

உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார்.

பாரீஸ்,

அல்காரஸ் சறுக்கல்

உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் (7,595 புள்ளி) மீண்டும் 'நம்பர் ஒன்' அரியணையை பிடித்துள்ளார். பிரெஞ்சு ஓபன் போட்டியில் அரைஇறுதியில் கார்லஸ் அல்காரசையும், இறுதிசுற்றில் கேஸ்பர் ரூட்டையும் வீழ்த்தி 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்த ஜோகோவிச் 3-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறி இருக்கிறார். 36 வயதான ஜோகோவிச் இந்த ஆண்டில் 3-வது முறையாக முதலிடத்தை ஆக்கிரமித்துள்ளார். கடைசியாக கடந்த மே மாதத்தில் முதலிடத்தில் இருந்த ஜோகோவிச் நம்பர் ஒன் வீரராக 388-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.

அரைஇறுதியில் தோல்வி கண்ட 20 வயது ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் (7,175) முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு இறங்கினார். முதல் சுற்றில் தோற்று வெளியேறிய ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் (6,100) ஒரு இடம் சறுக்கி 3-வது இடத்தை பெற்றுள்ளார். இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த நார்வே வீரர் கேஸ்பர் ரூட் (4,960) 4-வது இடத்தில் தொடருகிறார்.

ரபெல் நடாலுக்கு 136-வது இடம்

சிட்சிபாஸ் (கிரீஸ்), ஹோல்ஜர் ரூனே (டென்மார்க்), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), ஜானிக் சின்னெர் (இத்தாலி) ஆகியோர் முறையே 5 முதல் 9 இடங்களில் மாற்றமின்றி நீடிக்கின்றனர். ரஷிய வீரர் கரன் கச்சனேவ் ஒரு இடம் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார்.

முன்னாள் நம்பர் ஒன் வீரரும், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜனவரி மாதத்தில் இருந்து எந்தவித போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதனால் அவர் 121 இடம் சரிந்து 136-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஒற்றையர் தரவரிசையில் ரபெல் நடால் 'டாப்-100' இடங்களுக்கு வெளியே தள்ளப்பட்டுள்ளது 2003-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும்.

ஸ்வியாடெக் முதலிடத்தில் நீடிப்பு

பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (8,940 புள்ளி) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். பிரெஞ்சு ஓபனை 3-வது முறையாக வென்ற ஸ்வியாடெக் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து முதலிடத்தில் தொடருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா பிரெஞ்சு ஓபனை வென்றால் முதலிடத்துக்கு முன்னேற வாய்ப்பு இருந்தது. ஆனால் சபலென்கா (8,012) அரைஇறுதியில் கரோலினா முச்சோவாவிடம் தோல்வி அடைந்ததால் அந்த வாய்ப்பை இழந்து 2-வது இடத்தில் நீடிக்கிறார். நடப்பு விம்பிள்டன் சாம்பியனான கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா (5,090) உடல் நலக்குறைவு காரணமாக 3-வது சுற்று போட்டிக்கு முன்னதாக விலகினாலும் ஒரு இடம் உயர்ந்து 3-வது இடத்தை தனதாக்கினார். பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா (5,025) ஒரு இடம் அதிகரித்து 4-வது இடத்தையும், அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா (4,905) 2 இடம் சறுக்கி 5-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தையும், அமெரிக்க வீராங்கனை கோகோ காப் ஒரு இடம் சரிந்து 7-வது இடத்தையும் பிடித்துள்ளனர். கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 8-வது இடத்தில் நீடிக்கிறார். பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) ஒரு இடம் உயர்ந்து 9-வது இடத்தையும், அரைஇறுதியில் தோல்வி கண்ட பிரேசில் வீராங்கனை ஹாடட் மையா 4 இடம் ஏற்றம் கண்டு 10-வது இடத்தையும் பிடித்தனர். இதன் மூலம் ஹாடட் மைனா பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் 'டாப்-10' இடங்களுக்குள் வந்த முதல் பிரேசில் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இறுதிப்போட்டியில் ஸ்வியாடெக்கிடம் வீழ்ந்த கரோலினா முச்சோவா (செக்குடியரசு) 27 இடங்கள் எகிறி 16-வது இடத்தை தனதாக்கினார்.


Next Story