ஊக்கமருந்து சர்ச்சை; முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனைக்கு 4 ஆண்டுகள் தடை...


ஊக்கமருந்து சர்ச்சை; முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனைக்கு 4 ஆண்டுகள் தடை...
x

image courtesy; AFP

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய முன்னாள் நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹாலெப், சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புது டெல்லி,

டென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹாலெப். ரோமானிய நாட்டை சேர்ந்தவர். மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 2017, 2018ல் முதலிடம் வகித்த ஹாலெப் 2018 பிரெஞ்ச் ஓபன், 2019 விம்பிள்டன் தொடர்களில் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

31 வயதான இவரிடம் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபன் தொடரின் போது ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் தடைசெய்யப்பட்ட ரோக்சாடுஸ்டாட் என்ற மருந்து அவரது ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளில் கலந்திருந்தது உறுதியானது. இதையடுத்து கடந்த அக்டோபரில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதனை எதிர்த்து ஹாலெப் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை விசாரித்து வந்த சர்வதேச டென்னிஸ் முகமை, 'சிமோனா ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்படுகிறது' என அறிவித்துள்ளது.

இந்த தடைகாலம் அவர் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்திலிருந்து கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. அதன்படி அக்டோபர் 2022 முதல் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஹாலெப், அக்டோபர் 6, 2026 வரை சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க தடை செய்யப்பட்டுள்ளார்.


Next Story