பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்று ஆட்டத்தில் அரினா சபலென்கா வெற்றி


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்று ஆட்டத்தில் அரினா சபலென்கா வெற்றி
x

பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், 2-ம் நிலை வீராங்கனையுமான அரினா சபலென்கா (பெலாரஸ்) தன்னை எதிர்த்த சக நாட்டவர் ஷிமானோவிச்சை 7-5, 6-2 என்ற நேர் செட்டில் வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

3-ம் நிலை வீராங்கனை ஜெசிகா பெகுலாவுக்கு (அமெரிக்கா) எதிராக ஆடிய கமிலா ஜியாகி (இத்தாலி) 2-6 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த போது காயத்தால் விலகினார். இதனால் பெகுலா 3-வது சுற்றை எட்டினார்.

தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் பிரான்சின் கரோலின் கார்சியாவுக்கு 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் அன்ன பிளின்கோவா (ரஷியா) 'செக்' வைத்தார். இந்த ஆட்டம் 2 மணி 51 நிமிடங்கள் நடந்தது. இதே போல் முன்னாள் சாம்பியன் ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 3-6, 6-1, 2-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பெய்டான் ஸ்டீன்சிடம் 'சரண்' அடைந்தார்.

கரோலினா முச்சோவா (செக்குடியரசு), டாரியா கசட்கினா (ரஷியா), அனஸ்டசியா போட்டோபோவா (ரஷியா), எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்), ஸ்விடோலினா (உக்ரைன்), ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) உள்ளிட்டோரும் 2-வது சுற்றில் வெற்றியை ருசித்தனர்.


Next Story