பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம் - ஜோகோவிச் சாதனை படைப்பாரா?


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம் - ஜோகோவிச் சாதனை படைப்பாரா?
x

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் இன்று தொடங்குகிறது.

பாரீஸ்,

ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி ஜூன் 11-ந் தேதி வரை நடக்கிறது.

களிமண் தரையில் நடைபெறும் போட்டியான பிரெஞ்சு ஓபனில் ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 2005-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபனில் அறிமுகமான ரபெல் நடால் 14 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதித்து இருக்கிறார். இதுவரை அந்த போட்டியில் 112 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருக்கும் அவர் 3 ஆட்டங்களில் மட்டுமே தோல்வி கண்டு இருக்கிறார்.

22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கும் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் இடுப்பு பகுதியில் ஏற்பட்டு இருக்கும் காயம் காரணமாக முதல்முறையாக இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். இதனால் இந்த முறை ஆண்கள் ஒற்றையர் பிரிவில் புதிய சாம்பியன் உருவாக வாய்ப்பு கனிந்து இருக்கிறது. இதேபோல் முன்னாள் சாம்பியனான ஆன்டி முர்ரேவும் (இங்கிலாந்து) போட்டியில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

முன்னாள் 'நம்பர் ஒன்' வீரரும், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 3-வது முறையாக பிரெஞ்சு ஓபனை கைப்பற்றுவதுடன் ரபெல் நடாலை பின்னுக்கு தள்ளி அதிக முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை தனியாக தன்வசப்படுத்த தீவிரம் காட்டுவார். ஆனால் அவர் இந்த சீசனில் நடந்த களிமண் தரை போட்டிகளில் கால்இறுதியை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒற்றையர் பிரிவில் 'நம்பர் ஒன்' வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) ஜோகோவிச்சுக்கு கடும் சவாலாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அவர் சமீபத்தில் பார்சிலோனா, மாட்ரிட்டில் நடந்த சர்வதேச போட்டிகளில் பட்டம் வென்று நல்ல பார்மில் இருக்கிறார். முன்னாள் நம்பர் ஒன் வீரர் டேனில் மெட்விடேவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), ஹோல்ஜர் ரூனே (டென்மார்க்), கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோரும் பட்டத்துக்கான ரேசில் முன்னிலை வகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து), ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் அரினா சபலென்கா (பெலாரஸ்), விம்பிள்டன் சாம்பியன் எலினா ரைபகினா (கஜகஸ்தான்), கோகோ காப் (அமெரிக்கா), ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) ஆகியோரில் ஒருவர் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.439 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்பவர்களுக்கு ரூ.20¼ கோடியும், 2-வது இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.10 கோடியும் பரிசாக வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் கோப்பையை வெல்பவர்களுக்கு ரூ.5¼ கோடி பரிசாக கிட்டும்.

இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5, 2 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story