பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முக்கியமான ஆட்டத்தில் ஜோகோவிச்-நடால் இன்று மோதல்


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முக்கியமான ஆட்டத்தில் ஜோகோவிச்-நடால் இன்று மோதல்
x

பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் முக்கியமான ஆட்டத்தில் ஜோகோவிச்-நடால் இன்று மோதுகின்றனர்.

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 8-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) 6-2, 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் போலந்தின் ஹர்காக்சை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். பிரெஞ்ச் ஓபன் வரலாற்றில் நார்வே வீரர் ஒருவர் கால்இறுதியை எட்டுவது இதுவே முதல்முறையாகும். மற்றொரு ஆட்டத்தில் டென்மார்க்கின் ஹோல்ஜர் ருனே 7-5, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 4-ம் நிலை வீரர் சிட்சிபாசுக்கு (கிரீஸ்) அதிர்ச்சி அளித்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக கால்இறுதிக்கு வந்துள்ள 19 வயதான ஹோல்ஜர் அடுத்து கேஸ்பருடன் மல்லுகட்டுகிறார்.

களிமண் தரை போட்டியின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 6-1, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் கச்சனோவை (ரஷியா) விரட்டியடித்து கால்இறுதியை உறுதி செய்தார். அவர் அடுத்து ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) எதிர்கொள்கிறார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்றிரவு நடக்கும் முக்கியமான கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் 'நம்பர் ஒன்' வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), பிரெஞ்சு ஓபனை 13 முறை வென்றவரான ரபெல் நடாலும் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்துகிறார்கள். டென்னிஸ் களத்தின் பரம எதிரிகளான இருவரும் இதுவரை 58 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இதில் 30-ல் ஜோகோவிச்சும், 28-ல் நடாலும் வெற்றி பெற்றுள்ளனர். அதே சமயம் பிரெஞ்சு ஓபனை எடுத்துக் கொண்டால் ஜோகோவிச்சுக்கு எதிராக 9 முறை மோதியதில் அதில் 7-ல் நடால் வெற்றி கண்டு ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்றில் ரஷியாவின் டாரியா கசட்கினா 6-2, 6-2 என்ற நேர் செட்டில் கமிலா ஜியார்கியை (இத்தாலி) தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

இதே போல் ரஷியாவின் வெரோனிகா குடெர்மேட்டோவா 1-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ்சை சாய்த்து கிராண்ட்ஸ்லாமில் முதல்முறையாக கால்இறுதியில் கால்பதித்தார். தரவரிசையில் 29-வது இடத்தில் உள்ள குடெர்மேட்டோவா, கால்இறுதியில் சக நாட்டவர் கசட்கினாவை சந்திக்கிறார்.


Next Story