பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: பிரேசில் வீராங்கனை ஹாடட் மையா கால்இறுதிக்கு முன்னேறி சாதனை


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: பிரேசில் வீராங்கனை ஹாடட் மையா கால்இறுதிக்கு முன்னேறி சாதனை
x

Image Courtacy: AFP

பிரெஞ்சு ஓபன் டென்னிசில் பிரேசில் வீராங்கனை ஹாடட் மையா கால்இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தார்.

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள இந்த போட்டியில் நேற்று 4-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

ஆண்கள் பிரிவில் 4-ம் நிலை வீரர் கேஸ்பர் ரூட் (நார்வே) 7-6 (7-3), 7-5, 7-5 என்ற நேர் செட்டில் நிகோலஸ் ஜாரியை (சிலி) தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 3 மணி 20 நிமிடங்கள் நடந்தது.

முன்னதாக 5-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) 7-5, 6-3, 6-0 என்ற நேர் செட்டில் செபாஸ்டியன் ஆப்னரை (ஆஸ்திரியா) வெளியேற்றினார். சிட்சிபாஸ் கால்இறுதியில் முதல்நிலை வீரர் கார்லஸ் அல்காரசுடன் (ஸ்பெயின்) மோத இருக்கிறார்.

பிரேசில் வீராங்கனை சாதனை

பெண்கள் ஒற்றையர் பிரிவில் பீட்ரிஸ் ஹாடட் மையா (பிரேசில்)- சாரா சோரிப்ஸ் தோர்மோ (ஸ்பெயின்) இடையிலான ஆட்டத்தில் பரபரப்பு எகிறியது. முதல் செட்டை டைபிரேக்கர் வரை போராடி இழந்த ஹாடட் மையா 2-வது செட்டிலும் தொடக்கத்தில் 0-3 என்று பின்தங்கி இருந்தார். ஆனாலும் நம்பிக்கையுடன் போராடிய அவர் சறுக்கலில் இருந்து மீண்டெழுந்து அதிசயத்தக்க வெற்றியை பறித்தார்.

3 மணி 51 நிமிடங்கள் நீடித்த இந்த யுத்தத்தில் ஹாடட் மையா 6-7 (3-7), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் சோரிப்சை வீழ்த்தி கிராண்ட்ஸ்லாமில் முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். நடப்பு பிரெஞ்சு ஓபனில் அதிக நேரம் நடந்த பெண்கள் பிரிவு ஆட்டம் இது தான். உலகத் தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள ஹாடட் மையா, கடந்த 55 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் கால்இறுதியை எட்டிய முதல் பிரேசில் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் 7-ம் நிலை வீராங்கனையான ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) 6-3, 6-1 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் பெர்னர்டா பெராவை விரட்டினார். பிரெஞ்சு ஓபனில் கால்இறுதிக்குள் கால்பதித்த முதல் துனிசியா நாட்டவரான ஜாபியர் அடுத்து ஹாடட் மையாவை சந்திக்கிறார்.

இதே போல் அமெரிக்காவின் கோகோ காப் தன்னை எதிர்த்த ஸ்கிமிட்லோவாவை (சுலோவக்கியா) 7-5, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்து கால்இறுதியை அடைந்தார்.


Next Story