ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் : சிட்சிபாஸை வீழ்த்தி ஜோகோவிச் அபார வெற்றி


ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் : சிட்சிபாஸை வீழ்த்தி ஜோகோவிச் அபார வெற்றி
x

Image Courtesy: AFP

மற்றொரு போட்டியில் ரபெல் நடாலை வீழ்த்தி அலியாசிம் வெற்றி பெற்றார்.

துரின்,

ஆண்டின் இறுதியில் ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஏ.டி.பி. இறுதி சுற்று உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது.

குரூப் சுற்று நவம்பர் 18 வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் தரவரிசையில் டாப்-8 இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். அவர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். '

ரவுண்ட்-ராபின்' முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள். அந்த வகையில் இந்த முறை நோவக் ஜோகோவிச், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஆண்ட்ரே ரூப்லெவ் மற்றும் டேனியல் மெட்வெடேவ் ஆகியோர் 'ரெட்' பிரிவில் இடம்பெற்று உள்ளனர். 'கிரீன்' பிரிவில் ரபேல் நடால், காஸ்பர் ரூட், பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் மற்றும் டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் உள்ளனர்.

இந்த தொடரில் இன்று நடந்த போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால் (ஸ்பெயின்)- பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் (கனடா) மோதினர். இந்த போட்டியில் அலியாசிம் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இன்று நடந்த மற்றொரு போட்டியில் ஜோகோவிச் (செர்பியா)- ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்) மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜோகோவிச் 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி வெற்றி பெற்றார்.


Next Story