ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ரபெல் நடால் மீண்டும் தோல்வி


ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ரபெல் நடால் மீண்டும் தோல்வி
x

கோப்புப்படம்

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2-வது தோல்வியை சந்தித்த ரபெல் நடால் அரைஇறுதி வாய்ப்பை இழந்தார்.

துரின்,

உலக தரவரிசையில் முன்னணியில் இருக்கும் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் ரெட், கிரீன் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரிவில் உள்ள வீரர்கள், தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

இதில் 3-வது நாளில் 'கிரீன்' பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 3-6, 4-6 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம்மிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். முதலாவது ஆட்டத்தில் டெய்லர் பிரைட்ஸ்சிடம் தோல்வி கண்டு இருந்த நடால் தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். இதன் மூலம் நடால் அரைஇறுதி வாய்ப்பை இழந்தார். கேஸ்பர் ரூட்டிடம் தோற்று இருந்த அலியாசிம் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் 6-3, 4-6, 7-6 (8-6) டெய்லர் பிரைட்ஸ்சை (அமெரிக்கா) வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்ததுடன் அரைஇறுதி வாய்ப்பையும் உறுதி செய்தார்.

'ரெட்' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-4, 6-1 என்ற நேர் செட்டில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவை தோற்கடித்து 2-வது வெற்றியோடு அரைஇறுதியை எட்டினார்.

கார்லஸ் அல்காரஸ் சாதனை

உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால் அரைஇறுதி வாய்ப்பை இழந்ததன் மூலம் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கும் வாய்ப்பு 19 வயது ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரசுக்கு கிடைத்து இருக்கிறது. அத்துடன் இந்த ஆண்டு இறுதி தரவரிசையிலும் அவர் நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்துள்ளார். இதன் மூலம் ஆண்டின் இறுதியில் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த இளம் வீரர் என்ற சாதனையை அல்காரஸ் படைத்தார். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய வீரர் லெய்டன் ஹெவிட் 20 வயதில் ஆண்டின் கடைசியில் நம்பர் ஒன் இடத்தை வகித்ததே சாதனையாக இருந்தது.

ஆண்டு இறுதியில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த 18-வது வீரர், 2-வது ஸ்பெயின் வீரர் என்ற சிறப்பையும் அல்காரஸ் தனதாக்கினார்


Next Story