மியாமி ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா, ரைபகினா அரைஇறுதிக்கு முன்னேற்றம்


மியாமி ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா, ரைபகினா அரைஇறுதிக்கு முன்னேற்றம்
x

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெசிகா பெகுலா, எலினா ரைபகினா ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினர்.

மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), 26-ம் நிலை வீராங்கனையான அனஸ்டாசியா படபோவாவை (ரஷியா) எதிர்கொண்டார்.

மழை காரணமாக 4 மணி நேர தாமதத்துக்கு பிறகு தொடங்கிய இந்த ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா 4-6, 6-3, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் அனஸ்டாசியா படபோவாவை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் செரீனா வில்லியம்சுக்கு பிறகு (2014, 2015-ம் ஆண்டு) இந்த போட்டி தொடரில் தொடர்ந்து 2-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறிய முதல் அமெரிக்க வீராங்கனை என்ற பெருமையை பெகுலா பெற்றார்.

மற்றொரு கால்இறுதியில் விம்பிள்டன் சாம்பியனும், தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 6-3, 6-0 என்ற நேர்செட்டில் இத்தாலியின் மார்டினா டிரிவிசனை தோற்கடித்து முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். சர்வதேச போட்டியில் ரைபகினா தொடர்ச்சியாக ருசித்த 12-வது வெற்றி இதுவாகும். அரைஇறுதியில் ரைபகினா, ஜெசிகா பெகுலாவை சந்திக்கிறார். பெகுலாவுக்கு எதிராக இதுவரை மோதிய 2 ஆட்டங்களிலும் ரைபகினா தோல்வியை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-4, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் டாமி பாலை வீழ்த்தி தொடர்ச்சியாக 9-வது வெற்றியுடன் கால்இறுதியை எட்டினார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான டேனில் மெட்விடேவ் (ரஷியா) 6-4, 6-2 என்ற நேர்செட்டில் பிரான்சின் குயின்டின் ஹாலிஸ்சை விரட்டியடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் கரன் கச்சனோவ் (ரஷியா), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), பிரான்சிஸ்கோ செருன்டோலோ (அர்ஜென்டினா), எமில் ரூசுவோரி (பின்லாந்து), கிறிஸ்டோபர் எபாங்ஸ் (அமெரிக்கா)ஆகியோர் வெற்றி பெற்றனர்.


Next Story