4 மாதங்களில் ஆர்டர்லி முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்- சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


4 மாதங்களில் ஆர்டர்லி முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்- சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 Aug 2022 1:59 PM IST (Updated: 23 Aug 2022 3:27 PM IST)
t-max-icont-min-icon

அரசு உத்தரவாதம் அளித்தபடி ஆர்டர்லி முறையை 4 மாதத்திற்குள் ஒழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்

சென்னை,

காவல்துறை குடியிருப்பில் வசித்த போலீஸ்காரர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், போலீஸ் உயர் அதிகாரிகளின் வீட்டில் ஆர்டர்லியாக வேலை செய்து வரும் போலீஸ்காரர்களை உடனே திரும்ப பெறவேண்டும் என்று உத்தரவிட்டார். இதன்படி ஆர்டர்லிகளை திரும்ப பெறும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டது.

அதைத்தொடர்ந்து நீதிபதி, ''காவல்துறை பணி தவிர தனிப்பட்ட பணிகளுக்காக ஆர்டர்லியை பயன்படுத்த மாட்டோம் என அனைத்து ஐ.பி.எஸ். அதிகாரிகளும் உத்தரவாதம் அளித்துள்ளனர். அதனை டி.ஜி.பி. (சைலேந்திரபாபு) அறிக்கையில் குறிப்பிட்டு அனைத்து அதிகாரிகள் சார்பாக உத்தரவாதம் அளித்துள்ளார். ஆர்டர்லி முறையை ஒழிக்க அவர் எடுத்துவரும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. பாராட்டுக்குரியது. இதுதொடர்பான நடவடிக்கை திருப்தி அளிக்கிறது. ஒரு அதிகாரி 5 பயிற்சி பெற்ற போலீஸ்காரர்களை ஆர்டர்லிகளாக பயன்படுத்தும்போது, மாதம் ரூ.2.50 லட்சம் அரசுக்கு செலவு ஆகுகிறது. உயர் அதிகாரிகளுக்கு தேவைப்பட்டால் இருப்பிட உதவியாளர்களை குறைந்த ஊதியத்துக்கு நியமிக்கலாம்'' என்று கூறினார். இதன்பின்னர் இந்த வழக்கில் அடுத்த வாரம் இறுதி உத்தரவு பிறப்பிப்பதாக கூறி 23-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இன்று பிறப்பித்தார். அதில், அரசு உத்தரவாதம் அளித்தபடி ஆர்டர்லி முறையை 4 மாதத்திற்குள் ஒழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். 'தேவைப்பட்டால் உயர் அதிகாரிகளுக்கு உதவியாளர், இருப்பிட உதவியாளர் பணியிடங்களை உருவாக்க தமிழக அரசுக்கு டிஜிபி பரிந்துரைக்கலாம். எந்த பணிக்காக நியமிக்கப்பட்டார்களோ அந்த பணியை மட்டும் வழங்கி அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமையை நிலைநாட்டவேணடும். காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக தங்கியிருப்போரை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story