டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இருந்து விடைபெறுகிறார் போபண்ணா


டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இருந்து விடைபெறுகிறார் போபண்ணா
x

Rohan Bopanna (image courtesy: Tata Open Maharashtra via ANI)

இந்தியாவின் முன்னணி இரட்டையர் வீரரான ரோகன் போபண்ணா டேவிஸ் கோப்பை போட்டியில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார்.

புதுடெல்லி,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப்-2 சுற்றில் இந்தியா-மொராக்கோ அணிகள் இடையிலான ஆட்டம் உத்தரபிரதேசத்தில் செப்டம்பர் மாதம் நடக்கிறது. இந்த போட்டியுடன் இந்தியாவின் முன்னணி இரட்டையர் வீரரான ரோகன் போபண்ணா டேவிஸ் கோப்பை போட்டியில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார்.

இது குறித்து 43 வயதான ரோகன் போபண்ணா நேற்று அளித்த பேட்டியில், 'வருகிற செப்டம்பர் மாதத்தில் எனது கடைசி டேவிஸ் கோப்பை போட்டியில் விளையாட திட்டமிட்டு இருக்கிறேன். 2002-ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக ஆடி வருகிறேன். 20 ஆண்டுகளாக விளையாடி வரும் நான் என்னுடைய கடைசி ஆட்டத்தை சொந்த ஊரான பெங்களூருவில் விளையாட விரும்புகிறேன். இது குறித்து இந்திய அணியில் உள்ள சக வீரர்களிடம் பேசினேன். அவர்கள் பெங்களூருவில் விளையாட மகிழ்ச்சி தெரிவித்தனர். கர்நாடக டென்னிஸ் சங்கமும் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்ய ஆர்வமாக இருக்கிறது. தற்போது பெங்களூருவில் இந்த போட்டியை நடத்துவதா? என்பதை முடிவு செய்வது அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் கையில் தான் இருக்கிறது' என்றார்.

சர்வதேச போட்டியில் தொடர்ந்து விளையாடுவீர்களா? என்று கேட்ட போது, 'நான் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் போனால் அந்த இடம் மற்றொரு இந்தியருக்கு கிடைக்காது. அதாவது நான் விம்பிள்டன் போட்டியில் இருந்து ஒதுங்கினால் அந்த இடம் மற்றொரு இந்திய வீரருக்கு செல்லாது. ஆனால் டேவிஸ் கோப்பை போட்டியை பொறுத்தமட்டில் நான் விலகினால் அந்த இடம் மற்றொரு இந்தியருக்கு கிடைக்கும். ஏதாவது ஒரு கட்டத்தில் ஆடுவதை நிறுத்த வேண்டும் என்று மனதில் நினைத்தேன். இந்திய அணியில் இருந்து விலகுவதற்கு இது சரியான தருணம் என்று கருதுகிறேன்' என்று பதிலளித்தார்.

தனது கடைசி டேவிஸ் கோப்பை ஆட்டத்தை ரோகன் போபண்ணா அவரது சொந்த ஊரில் விளையாட விருப்பம் தெரிவித்தாலும் அது நிறைவேறுவது என்பது கடினம் தான். இது குறித்து அகில இந்திய டென்னிஸ் சங்க பொதுச்செயலாளர் அனில் துபார் கூறுகையில் 'ரோகன் தனது கடைசி ஆட்டத்தை பெங்களூருவில் விளையாடினால் நன்றாக இருக்கும். ஆனால் நாங்கள் இந்த போட்டியை நடத்த உத்தரபிரதேசத்துக்கு ஏற்கனவே உறுதியளித்து விட்டோம். இந்த ஆட்டம் லக்னோவில் நடைபெறும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது' என்றார்.

உலக இரட்டையர் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் ரோகன் போபண்ணா இந்திய அணிக்காக இதுவரை 32 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். இதில் அவர் 12 ஒற்றையர் ஆட்டங்களிலும், 10 இரட்டையர் ஆட்டங்களிலும் வென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story