பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் விலகல்


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் விலகல்
x

மீண்டும் களம் திரும்புவது எப்போது என்பது குறித்து காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை என்று ரபேல் நடால் தெரிவித்துள்ளார்.

பாரீஸ்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 28-ந் தேதி பாரீசில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) விலகி இருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 2-வது சுற்றில் தோல்வி கண்டு வெளியேறிய ரபேல் நடால் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அதன் பிறகு எந்தவொரு போட்டியிலும் ஆடவில்லை.

36 வயதான ரபேல் நடால் நேற்று அளித்த பேட்டியில், 'விஷயங்கள் எப்படி மாறும் என்பது தெரியாது. ஆனால் அடுத்த ஆண்டு எனது டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி ஆண்டாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் தற்போது பயிற்சி பெறுவதற்கு தயாராக இல்லை. நான் மீண்டும் களம் திரும்புவது எப்போது என்பது குறித்து காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை' என்று தெரிவித்தார். ரபேல் நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 14 முறை வென்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story