பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடக்கம்


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடக்கம்
x

Image Courtesy: AFP

ரபெல் நடாலுக்கு இதுவே கடைசி பிரெஞ்சு ஓபனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரீஸ்,

ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று தொடங்கி ஜூன் 9-ந் தேதி வரை நடக்கிறது.

களிமண் தரையில் நடைபெறும் போட்டியான பிரெஞ்சு ஓபனில் ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆதிக்கம் செலுத்தி வருகிறார். முன்னாள் 'நம்பர் ஒன்' வீரரும், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ரபெல் நடால் 14 முறை பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்று சாதித்து இருக்கிறார். கடந்த ஆண்டு (2023) ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் 2-வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறிய ரபெல் நடால் இடுப்பு மற்றும் அடிவயிற்று பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அதன் பிறகு நடந்த பிரெஞ்சு ஓபன் உள்பட பல போட்டிகளை தவற விட்டார்.

காயத்தில் இருந்து மீண்டு வந்து இருக்கும் ரபெல் நடால் இந்த ஆண்டுடன் தொழில்முறை போட்டியில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார். இதனால் அவருக்கு இதுவே கடைசி பிரெஞ்சு ஓபனாக இருக்கும் என்று தெரிகிறது. எனவே அவர் இந்த போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்ய தீவிரம் காட்டுவார். 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரும், நடப்பு சாம்பியனுமான நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) பட்டத்தை தக்கவைப்பதுடன் தனது கிராண்ட்ஸ்லாம் எண்ணிக்கையை உயர்த்தும் முனைப்புடன் உள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் ஜானிக் சினெர் (இத்தாலி), முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியன் டேனில் மெட்விடேவ் (ரஷியா) ஆகியோர் ஜோகோவிச், ரபெல் நடால் ஆகியோருக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 'நம்பர் ஒன்' வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான இகா ஸ்வியாடெக் (போலந்து), ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் அரினா சபலென்கா (பெலாரஸ்), முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் எலினா ரைபகினா (கஜகஸ்தான்), கோகோ காப் (அமெரிக்கா) ஆகியோரில் ஒருவர் பட்டம் வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டெனுடன் இணைந்து களம் காண்கிறார். இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.482 கோடியாகும்.

கடந்த வருடத்தை விட 7.8 சதவீதம் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு ரூ.21½ கோடியும், 2-வது இடம் பெறுபவர்களுக்கு ரூ.10¾ கோடியும் பரிசாக வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு ரூ.5½ கோடி பரிசாக கிடைக்கும்.


Next Story