அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி
x

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் தரவரிசையில் மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார்.

சிட்சிபாஸ் வெற்றி

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் முதல் நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-0-, 6-2, 6-3 என்ற நேர்செட்டில் 84-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் முல்லெரை (பிரான்ஸ்) துவம்சம் செய்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் 36 வயதான ஜோகோவிச் கார்லஸ் அல்காரஸ்சை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி உலக ஒற்றையர் தரவரிசையில் மீண்டும் 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்தார். இந்த போட்டி தொடரில் ஜோகோவிச் அடுத்த சுற்றில் தோற்றாலும் கூட அவரது முதலிடத்துக்கு பிரச்சினை வராது. புதிய தரவரிசை வருகிற 11-ந் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-2, 6-3, 6-4 என்ற நேர்செட்டில் மிலோஸ் ரானிக்கை (கனடா) தோற்கடித்தார். 5-ம் நிலை வீரரான நார்வேயின் கேஸ்பர் ரூட் 7-6 (7-5), 3-6, 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் எமிலி நாவாவை (அமெரிக்கா) போராடி வென்றார். அதே சமயம் 4-ம் நிலை வீரரான ஹோல்கர் ருனே (டென்மார்க்) 3-6, 6-4, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 63-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ராபர்டோ கார்பல்லாஸ் பானாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

மற்ற ஆட்டங்களில் மெட்விடேவ்(ரஷியா), அலெக்சாண்டர்ஸ்வெரேவ் (ஜெர்மனி), டியாபோ, டெய்லர் பிரிட்ஸ், மெக்கன்சி மெக்டொனால்டு, செபாஸ்டியன் கோர்டா, டாமி பால் (5 பேரும் அமெரிக்கா) (அட்ரியன் மன்னரினோ (பிரான்ஸ்), அஸ்லான் கரட்சேவ் (ரஷியா), டேவிடோவிச் போகினா (ஸ்பெயின்) ஆகியோரும் வெற்றி பெற்று 2-வது சுற்றை எட்டினர்.

ரைபகினா அசத்தல்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் 19 வயது அமெரிக்க வீராங்கனை கோகோ காப் சரிவில் இருந்து மீண்டு 3-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் லாரா சிஜ்மன்டை (ஜெர்மனி) வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். முன்னாள் விம்பிள்டன் சாம்பியனும், தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவருமான எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் மார்டா கோஸ்ட்யுக்கை (உக்ரைன்) ஊதித்தள்ளினார்.

ஆன்ஸ் ஜாபியர்(துனிசியா), ஹடட் மையா (பிரேசில்), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), டேனிலி காலின்ஸ் (அமெரிக்கா), எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்), ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) ஆகியோரும் தங்களது முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர்.


Next Story