அமெரிக்க ஓபன் டென்னிஸ் : 3-வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி


அமெரிக்க ஓபன் டென்னிஸ் : 3-வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி
x

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில் தோல்வி கண்ட முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கண்ணீர் மல்க டென்னிசில் இருந்து விடைபெற்றார்.

தோல்வியுடன் விடைபெற்றார் செரீனா

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளில் நடந்த பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், தற்போது தரவரிசையில் 605-வது இடத்தில் இருப்பவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 46-ம் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச்சை சந்தித்தார். 3 மணி 5 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் 5-7, 7-6 (7-5), 1-6 என்ற செட் கணக்கில் அஜ்லா டாம்ஜனோவிச்சிடம் தோற்று வெளியேறினார். ஏற்கனவே செரீனா இரட்டையர் ஆட்டத்தில் (வீனஸ் வில்லியம்சுடன் இணைந்து) தோல்வி கண்டு இருந்தார்.

இந்த அமெரிக்க ஓபன் போட்டியுடன் விளையாட்டில் இருந்து ஒதுங்கி தனது அடுத்த கட்ட விஷயங்களில் கவனம் செலுத்த போவதாக தெரிவித்து இருந்த செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றில் தோற்றதன் மூலம் டென்னிசில் இருந்து விடைபெற்றார்.

1995-ம் ஆண்டில் தொழில்முறை டென்னிஸ் போட்டியில் அடியெடுத்து வைத்த செரீனாவின் 27 ஆண்டு கால சாதனை டென்னிஸ் பயணம் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது. 1999-ம் ஆண்டில் முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமெரிக்க ஓபனை வென்ற செரீனா கடைசியாக 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்று இருந்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட்டின் (24 பட்டம்) சாதனையை சமன் செய்ய அவர் எடுத்த முயற்சி நூலிழையில் கைகூடாமல் போனது. அவர் தனது முதலாவது கிராண்ட்ஸ்லாமை கைப்பற்றிய அமெரிக்க ஓபன் போட்டியிலேயே கனத்த இதயத்துடன் ஓய்வு பெற்றார். அவரது ஆட்டத்தை காண 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குழுமியிருந்தனர்.

23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்

இந்த மாத இறுதியில் 41-வது வயதை எட்டும் செரீனா வில்லியம்ஸ் டென்னிசில் அதிக ஆண்டுகள் கொடிகட்டி பறந்தார். அவர் 319 வாரங்கள் ஒற்றையர் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை அலங்கரித்துள்ளார். 23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை (ஆஸ்திரேலிய ஓபன்-7, பிரெஞ்ச் ஓபன் -3, விம்பிள்டன்-7, அமெரிக்க ஓபன்-6) வென்று இருக்கிறார். பெண்கள் இரட்டையர் பிரிவில் 14 முறையும், கலப்பு இரட்டையர் பிரிவில் 2 தடவையும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கத்தை தனதாக்கி இருக்கிறார்.

உணர்ச்சி பெருக்குடன் கண்ணீர் மல்க விடைபெற்ற செரீனா வில்லியம்ஸ் கூறுகையில், 'எனது டென்னிஸ் வாழ்க்கையில் நான் ஒரு போதும் விட்டுக்கொடுத்தது கிடையாது. இந்த போட்டியிலும் நான் விட்டுவிடாமல் இறுதி வரை வெற்றிக்காக போராடினேன். எனது வாழ்க்கையில் இது மிகவும் நம்ப முடியாத அருமையான பயணமாகும். எனது டென்னிஸ் வாழ்க்கை பெற்றோரிடம் இருந்து தொடங்கியது. அவர்கள் எல்லாவற்றுக்கும் தகுதியுடையவர்கள். அவர்களுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இவை எல்லாம் ஆனந்த கண்ணீர் என்று நான் நினைக்கிறேன். வீனஸ் இல்லாவிட்டால் நான் இதுபோன்ற செரீனாவாக இருக்க முடியாது. டென்னிசில் வீனஸ் எனக்காக நம்பமுடியாத உதவிகளை செய்து இருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன். எனக்கு ஊக்கம் அளித்த ஒவ்வொருவருக்கும் நன்றி' என்றார். டென்னிசில் இருந்து விடைபெறும் முடிவை மறுபரிசீலனை செய்யும் திட்டம் உள்ளதா? என்ற கேள்விக்கு செரீனா பதிலளிக்கையில், 'நான் அப்படி எதுவும் சிந்திக்கவில்லை. ஆனால் அது உங்களுக்கு தெரியாது' என்றார்.

கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் அலெக்சிஸ் ஒஹானியனை மணந்த செரீனாவுக்கு ஒலிம்பியா என்ற 5 வயது பெண் குழந்தை உள்ளது. குழந்தை பெற்ற பிறகு மீண்டும் களம் திரும்பிய செரீனாவால் அதன்பிறகு பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.

பியான்கா அதிர்ச்சி தோல்வி

மற்றொரு ஆட்டத்தில் 2019-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு 3-6, 2-6 என்ற நேர்செட்டில் சமீபத்தில் நடந்த சின்சினாட்டி ஓபனை வென்ற கரோலின் கார்சியாவிடம் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

மற்ற ஆட்டங்களில் கோகோ காப் (அமெரிக்கா), ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா), வெரோனிகா குடெர்மிடோவா (ரஷியா), அலிசன் ரிஸ்கே (அமெரிக்கா), ஷூய் ஜாங் (சீனா), லிட்மிலா சாம்சோனோவா (ரஷியா) ஆகியோர் வெற்றியை ருசித்தனர்.

ஆன்டி முர்ரே வெளியேற்றம்

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ரஷியாவின் டேனில் மெட்விடேவ் 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் சீனாவின் வூ யிபிங்கை ஊதித்தள்ளி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 4-6, 4-6, 7-6 (7-1), 3-6 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் பெரேட்டினியிடன் பணிந்து நடையை கட்டினார்.

கேஸ்பர் ரூட் (நார்வே), நிக் கிரியாஸ் (ஆஸ்திரேலியா), கரன் கச்சனோவ் (ரஷியா), பாப்லோ காரெனோ பஸ்டா (ஸ்பெயின்), டேவிடோவிச் போகினா (ஸ்பெயின்) ஆகியோர் தங்களது 3-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.


Next Story