அமெரிக்க ஓபன் டென்னிஸ்:அல்காரஸ், ஜாபியர் 4-வது சுற்றுக்கு தகுதி...!!


அமெரிக்க ஓபன் டென்னிஸ்:அல்காரஸ், ஜாபியர் 4-வது சுற்றுக்கு தகுதி...!!
x
தினத்தந்தி 4 Sep 2023 4:47 AM GMT (Updated: 4 Sep 2023 5:00 AM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிசில் அல்காரஸ், ஜாபியர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

நியூயார்க்,

அல்காரஸ் - மெட்விடேவ்

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளில் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று போட்டிகள் நடந்தன.

'நம்பர் ஒன்' வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-2, 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் டேனியல் இவான்சை (இங்கிலாந்து) வீழ்த்தி தொடர்ந்து 3-வது ஆண்டாக 4-வது சுற்றை எட்டினார். இந்த வெற்றிக்காக 3 மணி 11 நிமிடங்கள் போராடிய அல்காரஸ் அடுத்து 61-ம் நிலை வீரர் மேட்டியோ அர்னால்டியுடன் (இத்தாலி) மோதுகிறார்.

மற்றொரு போட்டியில் 6-ம் நிலை வீரர் யானிக் சின்னெர் (இத்தாலி) 6-3, 2-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் 2016-ம் ஆண்டு சாம்பியனான வாவ்ரிங்காவை (சுவிட்சர்லாந்து) வெளியேற்றினார். ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஜாக் டிராப்பர் (இங்கிலாந்து), ரூப்லெவ் (ரஷியா), அலெக்ஸ்டி மினார் (ஆஸ்திரேலியா) ஆகியோரும் வெற்றிகரமாக 4-வது சுற்றுக்குள் கால்பதித்தனர்.

பெகுலா, ஜாபியர் போராட்டம்

பெண்கள் பிரிவில் உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் ஜெசிகா பெகுலா 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்விடோலினாவை (உக்ரைன்) சாய்த்தார். இந்த ஆண்டில் பெகுலா பதிவு செய்த 46-வது வெற்றி இதுவாகும். ஒரு ஆண்டில் அவர் பெற்ற அதிக வெற்றி இது தான். பெகுலா 4-வது சுற்றில் சக நாட்டவரான 17-ம் நிலை வீராங்கனை மேடிசன் கீஸ்சை எதிர்கொள்கிறார். முன்னதாக கீஸ் 5-7, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் சம்சோனோவாவை (ரஷியா) விரட்டினார்.

5-ம் நிலை நட்சத்திரம் ஆன்ஸ் ஜாபியர் தொடையில் ஏற்பட்ட காயத்தை சமாளித்து சறுக்கலில் இருந்து எழுச்சி பெற்று 5-7, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் மரி பவுஸ்கோவாவை (செக்குடியரசு) வீழ்த்தினார். திரில்லிங்கான இந்த போட்டி 2 மணி 56 நிமிடங்கள் நீடித்தது. சபலென்கா (பெலாரஸ்), விம்பிள்டன் சாம்பியன் வோன்ட்ரோசோவா (செக்குடியரசு), கின்வென் ஜெங் (சீனா), டாரியா கசட்கினா (ரஷியா), பெய்டான் ஸ்டீன்ஸ் (அமெரிக்கா) உள்ளிட்டோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.


Next Story