விம்பிள்டன் டென்னிஸ்: மெட்விடேவ், அல்காரஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்


விம்பிள்டன் டென்னிஸ்: மெட்விடேவ், அல்காரஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

கார்லஸ் அல்காரஸ் (image courtesy: Wimbledon twitter via ANI)

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் டேனில் மெட்விடேவ், கார்லஸ் அல்காரஸ் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் சரிவில் இருந்து மீண்டு வந்து 4-6, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் 67-ம் நிலை வீரரான மார்டன் புசோவிக்கை (ஹங்கேரி) விரட்டியடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 3 மணி 4 நிமிடம் நீடித்தது.

மற்றொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-3, 6-7 (6-8), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் 28-ம் நிலை வீரரான நிகோலஸ் ஜார்ரியை (சிலி) வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். முந்தைய சுற்றில் ஆன்டி முர்ரேவை 5 செட் போராடி சாய்த்து இருந்த கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 6-4, 7-6 (7-5), 6-4 என்ற நேர்செட்டில் தன்னை எதிர்த்த செர்பியாவின் லாஸ்லோ டிரியை துவம்சம் செய்தார்.

முந்தைய நாளில் நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-1, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் 88-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவை சாய்த்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை விம்பிள்டன் சாம்பியனும், உலகதரவரிசையில் 9-வது இடத்தில் உள்ளவருமான செக்குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிடோவா 6-3, 7-5 என்ற நேர்செட்டில் செர்பியாவின் நாதலிஜாவை தோற்கடித்து 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 13-வது இடத்தில் இருக்கும் பிரேசில் வீராங்கனை ஹேடட் மையா 6-2, 6-2 என்றநேர்செட்டில் ருமேனியாவின் சோரனா கிறிஸ்டியை பந்தாடினார். இன்னொரு ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை எகதெரினா அலெக்சாண்ட்ரோவா 6-0, 6-4 என்ற நேர்செட்டில் ஹங்கேரியின் டால்மா கால்பியை ஊதித் தள்ளினார். இதேபோல் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 6-2, 6-3 என்ற நேர்செட்டில் ரஷியாவின் அன்னா பிலின்கோவாவை வெளியேற்றினார்.

ஆண்கள் இரட்டையர்பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 6-7 (5-7), 4-6 என்ற நேர்செட்டில் இவான் டோடிச் (குரோஷியா)-ஆஸ்டின் கிராஜிசெக் (அமெரிக்கா) இணையிடம் தோல்வி கண்டு வெளியேறியது. முந்தைய நாளில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் ரோகன் போபண்ணா (இந்தியா)-மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி 6-2, 6-7 (5-7), 7-6 (10-8) என்றசெட் கணக்கில் அர்ஜென்டினாவின் குல்லெர்மோ டுரன்-தாமஸ் எட்செவெரி கூட்டணியை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.


Next Story