விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்வியாடெக், ஜோகோவிச் வெற்றி


விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்வியாடெக், ஜோகோவிச் வெற்றி
x

விம்பிள்டன் டென்னிசின் முதல் சுற்றில் ஸ்வியாடெக், ஜோகோவிச் வெற்றி பெற்றனர்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன

ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் 7-ம் நிலை வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) 6-3, 7-5, 6-4 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் புர்செல்லை விரட்டியடித்தார். 16-ம் நிலை வீரர் இத்தாலியின் லாரென்ஜோ முசெட்டி தன்னை எதிர்த்த பாப்லோ வரில்லாசை (பெரு) 6-3, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் பெட்ரோ சாசினை விரட்டியடித்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து), தரவரிசையில் 34-வது இடத்தில் உள்ள சீனாவின் லின் ஜூவுடன் மோதினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் முதல் செட்டை கைப்பற்றி 2-வது செட்டில் ஆடிய போது மழை குறுக்கிட்டது. இதனால் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் மைதானத்தின் மேற்கூரை மூடப்பட்டு ஆட்டம் தொடர்ந்தது. இதில் ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் லின் ஜூவை சாய்த்து 2-வது சுற்றை எட்டினார்.

4-ம் நிலை வீராங்கனை ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) முதல் தடையை கடக்கவே பெரும்பாடு படவேண்டியதாகி விட்டது. அவர் 6-2, 6-7 (8-10), 6-3 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான லாரன் டேவிசை சாய்த்தார். இந்த வெற்றியை பெற பெகுலாவுக்கு 2 மணி 20 நிமிடங்கள் தேவைப்பட்டது. மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 6-4, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் சீனாவின் யு யுவானை வெளியேற்றினார். போடோரோஸ்கா (அர்ஜென்டினா), பெட்ரா மார்டிச் (குரோஷியா), பார்போரா ஸ்டிரிகோவா (செக்குடியரசு) உள்ளிட்டோரும் முதல் சுற்றில் வெற்றி கண்டனர்.

இதற்கிடையே, மணிக்கட்டு காயம் காரணமாக ஆஸ்திரேலிய முன்னணி வீரர் நிக் கிரியாஸ் விம்பிள்டன் டென்னிசில் இருந்து விலகியுள்ளார். காயத்துக்கு ஆபரேஷன் செய்த பிறகு விம்பிள்டன் போட்டிக்கு தயாராவதற்கு கடினமாக முயற்சித்தேன். ஆனாலும் கை மணிக்கட்டில் இன்னும் வலி இருப்பதால் வேறு வழியின்றி விலகுகிறேன் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்ரோஷமான ஆட்டத்துக்கு சொந்தக்காரரான நிக் கிரியாஸ் கடந்த ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சிடம் தோல்வி அடைந்தது நினைவுகூரத்தக்கது.


Next Story