குல்தீப் யாதவை பாராட்டியது அஸ்வினைக் காயப்படுத்தியிருந்தால் மகிழ்ச்சிதான்- ரவிசாஸ்திரி


குல்தீப் யாதவை பாராட்டியது அஸ்வினைக் காயப்படுத்தியிருந்தால் மகிழ்ச்சிதான்- ரவிசாஸ்திரி
x
தினத்தந்தி 24 Dec 2021 8:30 AM GMT (Updated: 24 Dec 2021 8:30 AM GMT)

இந்தியாவின் நம்பர் 1 ஸ்பின்னர் குல்தீப் யாதவ் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சொன்னது தன் இதயத்தைநொறுங்கச் செய்தது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதற்கு ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார்.

புதுடெல்லி

குல்தீப் யாதவ் பற்றிய என்னுடைய கருத்துகள் அஸ்வினைக் காயப்படுத்தி அவரை மேலும் ஊக்கப்படுத்தியிருந்தால் மகிழ்ச்சியடைவேன் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

2018-ல் சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்தியாவின் குல்தீப் யாதவ் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மழையால் பாதிக்கப்பட்ட அந்த டெஸ்ட் போட்டி  டிரா ஆனது. இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது. இதையடுத்து பேட்டியளித்த அப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வெளிநாடுகளில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் முதல் தேர்வாக இருப்பார் என்றார். 

இது குறித்து கிரிக் இன்போ இணையதளத்திற்கு பேட்டி அளித்த அஸ்வின்,  இந்தியாவின் நம்பர் 1 ஸ்பின்னர் குல்தீப் யாதவ் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சொன்னது தன் இதயத்தை நொறுங்கச் செய்தது.  குல்தீப் யாதவுக்காக நான் உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன். என்னால் 5 விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை, குல்தீப் யாதவ் எடுத்தார். அது எவ்வளவு பெரிய விஷயம் என்பதும் எனக்குத் தெரியும்.

நான் நன்றாக வீசினாலும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றவில்லை என்பது ஒரு குறைதான். நான் உண்மையிலேயே குல்தீப் யாதவுக்காக மகிழ்கிறேன். ஆஸ்திரேலியாவில் வெல்வது மிக மிக மகிழ்ச்சியான தருணம். ஆனால் நான் அவருடைய வெற்றியில் பங்கேற்கும் போது, அணி அதை கொண்டாடும்போது நான் அந்த இடத்துக்குரியவன் என்பதை நான் உணர வேண்டும். ஆனால் என்னை ஒருமாதிரி மட்டம் தட்டி விட்டால் நான் எப்படி பார்ட்டியில் கலந்து கொள்ள முடியும். சக வீரரின் வெற்றியை என்னால் கொண்டாட முடியும்?” என்று கூறி இருந்தார். 

இதற்கு ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார். வெளிநாடுகளில் இந்தியாவின் நம்பர் 1 ஸ்பின்னர் குல்தீப் யாதவ் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சொன்னது தன் இதயத்தை நொறுங்கச் செய்தது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதற்கு ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக ரவி சாஸ்திரி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது;-

அனைவருக்கும் தடவிக்கொடுப்பது போல் வெண்ணையாகப் பேசுவது என் வேலையல்ல. எந்த ஒரு முன் திட்டமும் இல்லாமல் உண்மையைக் கூறுவதுதான் என் பணி. நான் குல்தீப் யாதவை பாராட்டியது அஸ்வினைக் காயப்படுத்தியிருந்தால் அதனால் எனக்கு மகிழ்ச்சிதான்.

அது அஸ்வினை வித்தியாசமாக வீசச் செய்தால் அது நன்மைதானே. அஸ்வின் சிட்னியில் ஆடவில்லை, குல்தீப் யாதவ்தான் ஆடினார். குல்தீப் யாதவ் அருமையாக வீசினார், 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கொடுத்தது நியாயம்தான். சரி ஒரு பயிற்சியாளர் ஒரு பவுலருக்கு சவால் விடுக்கிறார் என்றால் அவர் என்ன செய்ய வேண்டும்?

வீட்டுக்குப் போய் கோவென்று கதறி அழுது, ‘போ, நான் இனிமே வரவே மாட்டேன்’ என்று குழந்தை போல் அடம்பிடிப்பதா? நான் அஸ்வின் இடத்தில் இருந்தால், சவாலை ஏற்றுக் கொண்டு கோச் எப்படி தவறு என்று நிரூபிப்பேன். 

அவர் மேலும் கூறும்போது, 2018-ல் அஸ்வினிடம் கூறியது என்னவெனில் அவர் உடற்தகுதியில் 100% சரியாக வேண்டும் என்பதே. அதில் அவர் சிறப்பாக பணியாற்றினார், பாருங்கள் அஸ்வின் இப்போது எப்படி வீசுகிறார் என்று. அவர் வேர்ல்ட் கிளாஸ். 2019-லும் 2021-லும் அஸ்வின் பயங்கரமாக வீசுகிறார். ஈகோக்கள் இருக்கவே செய்யும் ஆனால் ஈகோவை நாம் எப்படி கட்டுப்படுத்தி திசைவழிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். இங்குதான் இருக்கிறது நம் மேன் மேனேஜ்மெண்ட் திறமைகள், என்றார் ரவி சாஸ்திரி.

Next Story