40 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம்..!
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடத்தும் வருடாந்திர மாநாட்டை 2023ல் இந்தியாவில் நடத்த ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
பெய்ஜிங்,
2023- ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டத்தை இந்தியாவில் நடத்த ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. 1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியா இந்த அமர்வை நடத்தவுள்ளது. இந்த அமர்வு அதிநவீன, ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் 139-வது ஐஓசியின் இந்த ஆண்டிற்கான கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்திய சார்பில் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபிநவ் பிந்தரா, ஐஓசி உறுப்பினர் நீடா அம்பானி, ஐஓஏ தலைவர் நரிந்தர் பத்ரா, மத்திய இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது, அடுத்த ஆண்டிற்கான (2023) கூட்டத்தை மும்பையில் நடத்துவதற்கான திட்டத்தை முன்மொழிந்தனர். இதனை அனைத்து நாடுகளும் ஒரு மனதாக ஏற்று கொண்டன. இதனையடுத்து 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் 2வது முறையாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் நடைபெற உள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வு 2023 இல் இந்தியாவுக்கு வரவிருக்கும் வரலாற்றுத் தருணம்! சமீபத்திய ஆண்டுகளில் இந்திய விளையாட்டு மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தச் சிறப்புமிக்க நிகழ்வில் இந்தியப் பிரதிநிதிகள் குழுவில் ஒரு பகுதியாக இருந்ததில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் என மத்திய அமைச்சர்,அனுராக் தாக்கூர் ட்வீட் செய்துள்ளார்.
40 வருட காத்திருப்புக்குப் பிறகு ஒலிம்பிக் இயக்கம் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளது. 2023ல் மும்பையில் ஐ.ஓ.சி. மாநாட்டை நடத்துவதற்க்கு இந்தியாவை தேர்ந்தெடுத்ததற்க்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவராக இருக்கிறேன்," என்று இந்தியாவில் இருந்து ஐ.ஓ.சி. உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி நீடா அம்பானி கூறினார்.
அம்பானியைத் தவிர, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் நரிந்தர் பத்ரா, விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் இந்தியாவின் முதல் தனிநபர் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
Related Tags :
Next Story