உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இந்தியா முதலிடம்...!


உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இந்தியா முதலிடம்...!
x
தினத்தந்தி 8 March 2022 12:19 AM IST (Updated: 8 March 2022 12:19 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு சம்மேளனத்தின் உலகக் கோப்பையில் இந்தியா நான்கு தங்கம் வென்று, முதலிடம் பிடித்தது.

கெய்ரோ,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்தது. இதில் நேற்று நடந்த 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான்- அனிஷ் பன்வாலா ஜோடி 17-7 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. 

முன்னதாக நடந்த ஆண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியா-ஜெர்மனி மோதின. அனிஷ் பன்வாலா, குர்பிரீத் சிங், பாவேஷ் ஷெகாவத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 7-17 என்ற புள்ளி கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது.

இந்த போட்டியில் இந்தியா 4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை கைப்பற்றி பதக்கபட்டியலில் முதலிடத்தை பிடித்தது. நார்வே (3 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம்) 2-வது இடத்தை பெற்றது. பிரான்ஸ் (3 தங்கம் உள்ளிட்ட 20 பதக்கங்களுடன்) மூன்றாம் இடத்தை பிடித்தது.

இப்போட்டியில் மொத்தம் 60 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். 

Next Story