ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று கோலாகல தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா மோதல்


ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று கோலாகல தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா மோதல்
x
தினத்தந்தி 26 March 2022 1:14 AM IST (Updated: 26 March 2022 1:14 AM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மும்பை,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டில் உதயமானது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இந்த ‘சரவெடி’ ஆட்டம் ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது. இதன்படி 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

இந்த முறை குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் புதிதாக அறிமுகம் ஆவதால், அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அணிகள் மோதும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதிக தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதி சுற்றுக்குள் நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், ‘பி’ பிரிவில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். எதிர்பிரிவில் உள்ள 5 அணிகளில் 4 அணிகளுடன் தலா ஒரு முறையும், தங்களுக்கு நிகரான அணியுடன் மட்டும் 2 முறையும் மோத வேண்டும். அதாவது ஒவ்வொரு அணியும் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டி இருக்கும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

ஒரே மாநிலத்தில் போட்டி

அதிகமான இடங்களுக்கு செல்லும் போது கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் அதை தவிர்க்கும் பொருட்டு இந்த முறை லீக் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் மராட்டிய மாநிலத்திலேயே நடத்தப்படுகிறது. மும்பையில் உள்ள 3 மைதானங்களில் 55 ஆட்டங்களும், புனேயில் 15 ஆட்டங்களும் இடம் பெறுகிறது. பிளே-ஆப் மற்றும் மே 29-ந்தேதி நடக்கும் இறுதிப்போட்டி இடம் விவரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

புதிய அணிகள் இணைந்ததால் அதையொட்டி பெரிய அளவில் வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். இதில் அதிகபட்சமாக இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ரூ.15¼ கோடிக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டார். பல வீரர்கள் அணி மாறியிருக்கிறார்கள். அதற்கு ஏற்ப ஒவ்வொரு அணி நிர்வாகமும் யுக்திகளை வகுத்து தங்களை பட்டை தீட்டியுள்ளன. இதனால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை அவ்வளவு எளிதில் கணித்து விட முடியாது. அதே சமயம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருவதால் ஐ.பி.எல்.-ல் ஒரு சில ஆட்டங்களை தவற விடும் நிலை உள்ளது. இதனால் தொடக்க கட்டத்தில் சரியான ஆடும் லெவன் அணியை அடையாளம் காண்பதில் சில அணிகளுக்கு சற்று தடுமாற்றம் இருக்கும்.

இதற்கு மத்தியில் ஷிகர் தவான், ஷாருக்கான் (பஞ்சாப்), மேக்ஸ்வெல், விராட் கோலி (பெங்களூரு), வார்னர், ரிஷாப் பண்ட் (டெல்லி), நிகோலஸ் பூரன் (ஐதராபாத்), லோகேஷ் ராகுல் (லக்னோ), ரோகித் சர்மா, இஷான் கிஷன் (மும்பை), ஹர்திக் பாண்ட்யா (குஜராத்), சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான்), ஸ்ரேயாஸ் அய்யர் (கொல்கத்தா), ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை) உள்ளிட்டோரின் அதிரடி ஜாலம் இந்த சீசனில் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் ஆட்டத்தில் சென்னை- கொல்கத்தா

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதுகின்றன.

இரு தினங்களுக்கு முன்பு சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி விலகியதால் இப்போது ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனாகி இருக்கிறார். இருப்பினும் ஒரு வீரராக டோனி நீடிப்பது சென்னை அணிக்கு பலமாகும். விசா பிரச்சினையால் தாமதமாக வந்து சேர்ந்த ஆல்-ரவுண்டர் மொயீன் அலி முதல் ஆட்டத்தில் விளையாடமாட்டார். இதே போல் ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயத்தில் இருந்து மீளாததால் பல ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை. இது சென்னை அணிக்கு நிச்சயம் பின்னடைவு தான். பேட்டிங்கில் கடந்த சீசனில் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை வசப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, வெய்ன் பிராவோ, அம்பத்தி ராயுடு, உத்தப்பா நம்பிக்கை அளிக்கிறார்கள்.

கொல்கத்தா அணியை பொறுத்தவரை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ஆந்த்ரே ரஸ்செல், ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ராணா மிரட்டுவார்கள். ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச், கம்மின்ஸ் முதல் 4-5 ஆட்டங்களில் ஆடமாட்டார்கள். பந்து வீச்சில் சுனில் நரின், வருண் சக்ரவர்த்தி, டிம் சவுதி, ஷிவம் மாவி உள்ளிட்டோர் வலு சேர்க்கிறார்கள்.

இரவு 7.30 மணிக்கு...

மொத்தத்தில் சவால்மிக்க இரு அணிகள் மல்லுகட்டுவதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 25 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் சென்னையும், 8-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றன. கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் சந்தித்த போது சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பட்டத்தை உச்சிமுகர்ந்தது. அதனால் அதற்கு பழிதீர்க்கும் வேட்கையுடன் கொல்கத்தா அணியினர் வரிந்துகட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

போட்டி நடக்கும் மும்பை வான்கடே ஆடுகளம் செம்மண் நிறைந்தது. பந்து நன்கு பவுன்ஸ் ஆகும். அதே நேரத்தில் பேட்டிங்குக்கும் உகந்ததாக காணப்படும். அதிலும் மைதானத்தின் நேர்பகுதி பவுண்டரி தூரம் குறைவாக இருக்கும். எனவே இங்கு 170-180 ரன்கள் வரை எடுத்தால் தான் சவாலான ஸ்கோராக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story