தாமஸ், உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்


தாமஸ், உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 8 May 2022 3:07 AM IST (Updated: 8 May 2022 3:08 AM IST)
t-max-icont-min-icon

தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் தாமஸ் கோப்பை போட்டியில் 16 ஆண்கள் அணிகளும், உபேர் கோப்பை போட்டியில் 16 பெண்கள் அணிகளும் கலந்து கொள்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். தாமஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஜெர்மனி, சீன தைபே, கனடா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்தியா தனது தொடக்க லீக் ஆட்டத்தில் இன்று ஜெர்மனியை சந்திக்கிறது. இந்திய அணியில் லக்‌ஷயா சென், ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரனாய் (ஒற்றையர் பிரிவு), சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி, எம்.ஆர்.அர்ஜூன்-துருவ் கபிலா, கிருஷ்ணபிரசாத்-விஷ்ணுவர்தன் கவுட் (இரட்டையர் பிரிவு) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஆண்கள் பிரிவில் இதுவரை பதக்கம் வெல்லாத இந்திய அணி இந்த முறை பதக்கத்தை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

உபேர் கோப்பை போட்டியில் இந்தியா ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த பிரிவில் தென்கொரியா, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன. இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று கனடாவை சந்திக்கிறது. இந்திய அணியில் பி.வி.சிந்து, ஆகார்ஷி காஷ்யப், உன்னாதி ஹூடா (ஒற்றையர் பிரிவு), தனிஷா கிரஸ்டோ, ஸ்ருதி மிஸ்ரா, சிம்ரன் சிங்கி, ரித்திகா தாகெர், திரிஷா ஜாலி (இரட்டையர் பிரிவு) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பெண்கள் பிரிவில் இந்திய அணி 2014, 2016 ஆகிய ஆண்டுகளில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.

நடப்பு சாம்பியன்கள் இந்தோனேஷியா 14 முறை தாமஸ் கோப்பையையும், சீனா 15 தடவை உபேர் கோப்பையையும் அதிகபட்சமாக கைப்பற்றி இருக்கின்றன.


Next Story