காவல் தெய்வமாக விளங்கும் கோலவிழி அம்மன்


காவல் தெய்வமாக விளங்கும் கோலவிழி அம்மன்
x
தினத்தந்தி 20 March 2024 6:00 AM GMT (Updated: 20 March 2024 7:53 AM GMT)

கோலவிழி அம்மன் திருத்தலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு சான்றாக, இங்கு அமைந்துள்ள கலை நயம் மிக்க நடனமாடும் காளி உற்சவர் அமைந்துள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு திருவண்ணாமலை, சித்திரைத் திருநாள் விழாவுக்கு மதுரை, ஆருத்திரா தரிசனத்திற்கு சிதம்பரம் என்ற வரிசையில், அறுபத்துமூவர் விழாவிற்கு மயிலாப்பூர் சிறப்பு பெற்றத் தலமாக விளங்குகின்றது. இந்த அறுபத்து மூவர் திருவிழாவானது, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனிப் பெருவிழாவின் ஒரு அங்கமாக நடத்தப்படுகிறது.

சிறப்பு மிக்க இந்த பெருவிழாவிற்குத் தொடக்கமாக முதல் மரியாதை பெறும் தலமாகத் திகழ்வது, மயிலாப்பூரில் உள்ள கோலவிழி அம்மன் என்னும் பத்ரகாளி திருக் கோவிலாகும். இந்த முதல் மரியாதைக்குக் காரணம், இது கபாலீஸ்வரர் திருக்கோவிலின் துணைக் கோவில் என்பது மட்டுமல்ல; மயிலாப்பூர் நகரின் எல்லைகளைக் காத்தருளும் காவல் தெய்வமாக இத்தல அம்மன் விளங்குகின்றாள் என்பதுதான்,

தொன்மைச் சிறப்பு

மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. விக்கிரமாதித்தன் காலத்துக் கோவில், 600 ஆண்டுகளுக்கு முன்பு அகோரிகள் வழிபட்ட ஆலயம் என சித்தர் வாக்கின் மூலம் தெரிய வருகிறது. மேலும் இந்த திருத்தலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு சான்றாக, இங்கு அமைந்துள்ள கலை நயம் மிக்க நடனமாடும் காளி உற்சவர் அமைந்துள்ளது. இது சோழர் காலத்தைச் சார்ந்ததாகும். சிதிலமடைந்திருந்த இந்தக் கோவில் 1981ம் ஆண்டு அடியார்கள் ஆதரவினாலும், மயிலை குருஜி சுந்தரராம சுவாமிகளின் ஆதரவினாலும் திருப்பணி செய்யப்பட்டு வழிபாட்டுக்கு வந்துள்ளது.

தக்கனின் யாகத்தை அழித்தவர் வீரபத்திரர் என்பது புராணம். அதை உறுதிப்படுத்தும் வகையில் வீரபத்திரர் ஆலயம், பத்ரகாளி எனும் கோலவிழியம்மன் கோவிலுக்கு மேற்கே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆலய அமைப்பு

வடக்கு திசை நோக்கி எளிய நுழைவு வாசலுடன் ஆலயம் அமைந்துள்ளது. ஆஞ்சநேயர் சன்னிதி, அரசடி விநாயகர், சப்தமாதர்கள், கருவறை முன்புறம் விநாயகர், பாலமுருகன் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். அம்மனுக்கு எதிரே பலிபீடம், சிம்ம வாகனம் ஆகியவை காட்சி தருகின்றன. வடக்கு நோக்கிய கருவறைக்குள் முன்புறம் சிறிய வடிவிலான அம்மனும், பின்புறம் பிரமாண்ட கோலத்தில் சுதைச் சிற்பமாகஅமர்ந்த கோலத்திலும் கோலவிழி அம்மன் காட்சி தருகின்றனர். அபிஷேக ஆராதனைகள் சிறிய அம்மனுக்கும், அலங்காரம் ஆராதனைகள் பெரிய அம்மனுக்கும் நடத்தப்படுகின்றன.

கோலவிழி அம்மன்

அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் அன்னையே, கோல விழி அம்மனாக விளங்குகிறாள். இடது காலடியில் அசுரனின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் காட்சி தருகிறாள். வலது எண் கரங்களில், சூலம், வாள், உடுக்கை, வேதாளம் ஏந்தியும், இடது எண் கரங்களில் கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஏந்தியும் அன்னை காட்சி தருகின்றாள். சிரசில் உள்ள தீ ஜுவாலைகளில் பதினைந்து இதழ்கள், அதன் நடுவே சீறும் நாகம், திருமுடியின் இடதுபுறம் சந்திரன், கங்கை, வலதுபுறம் நாகம், காதணி அணிந்து, சிவசக்தி சொரூபமாக அன்னை காட்சி தருகின்றாள். இவளது இயற்பெயர் பத்ரகாளி என்பதாகும்.

'பத்ர' என்பதற்கு மங்களம் என்றொரு பொருள் உண்டு. தன்னை நாடி வருவோருக்கு மங்களங்களை அள்ளித் தருபவளாகத் திகழ்வதால், இத்தல அம்மன் பத்ரகாளியாகவும் விளங்குகின்றாள். அன்னையின் சிறப்பே அவளின் கோல விழிகள்தான். வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தூண்டும் கருணை அருளும் நாயகி, கோலவிழி அம்மன் என்றால் அது மிகையல்ல.

விழாக்கள்

சித்திரா பவுர்ணமியில் பூச்சொரிதல் விழா, ஆடிப்பூர விழா, தீச்சட்டி ஏந்தும் விழா, புரட்டாசியில் நவராத்திரி விழா மற்றும் 10-ம் நாள் சூரனை வதம் செய்யும் விழா, மாசியில் மூன்றாம் ஞாயிறன்று பால் குடப்பெருவிழா ஆகியவை இந்த ஆலயத்தில் நடைபெறும் குறிப்பிடத்தக்க விழாக்கள் ஆகும். இந்து சமய அறநிலையத்துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

சென்னை கடற்கரைச் சாலையில் கலங்கரை விளக்கம் மற்றும் ஆல் இண்டியா ரேடியோவில் இருந்து தென்மேற்கே அரை கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. அதேபோல, கபாலீசுவரர் திருக்கோவிலுக்கு வட கிழக்கே சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சென்றால் கோலவிழி அம்மன் ஆலயத்தை அடையலாம்.

குறை தீர்க்கும் அம்மன்

திருமணப் பேறு, குழந்தைப் பேறு, குடும்பச் சிக்கல்கள், பிணி தீர்த்தல், மன அமைதி மற்றும் ராகு தோஷம் போன்றவற்றை தீர்த்து வைக்கும் கண்கண்ட தெய்வமாகக் கோலவிழி அம்மன் விளங்குகின்றாள். ராகுதோஷம் உள்ளவர்கள் கோலவிழி அம்மனையும், இங்குள்ள வராகியையும் வழிபட்டு சிறப்பான பலன் பெறலாம். அதேபோல, தீராத நோயுற்றவர்கள் கருவறையின் வெளியே உள்ள ஆமை புடைப்புச் சிற்பத்திற்கு ராகு காலத்தில் இளநீர் அபிஷேகம் செய்து, அர்ச்சனை, ஆராதனை செய்தால் நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து நோய் குணமாகும் என்பது ஐதீகம். மேலும் பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீவினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாலயத்தில் மனம் உருக வேண்டி ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வலமாக 27 சுற்றும் இடமாக இரண்டு சுற்றும் சுற்றி வழிபட்டு வந்தால் நல்ல பலன் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.


Next Story