குரல்வளை அகற்றப்பட்ட நோயாளியை மீண்டும் பேச வைத்த சிறப்பு சிகிச்சை - டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை
உயர்தர சிகிச்சைக்கும் நவீன மருத்துவ வசதிகளுக்கும் பெயர் பெற்ற டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை தன்னுடைய மகுடத்தில் இன்னொரு வைரத்தை பதித்து உள்ளது. புற்றுநோயினால் முழுவதுமாக தன் குரல்வளையை இழந்த ஒருவருக்கு மீண்டும் பேசும்வாய்ப்பை அளிக்கும் லாரிங்கோ ஈசோபேஜியல்பங்சர் என்ற அறுவைசிகிச்சை முறையை வெற்றிகரமாக செய்து அவரை மீண்டும் பேச வைத்துள்ளது.
நோய் கண்டறிதல் :
இந்திய விமான நிலையத்தில்பணிபுரியும் 49 வயதான கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு இரண்டு மாதங்களாக குரலில் மாற்றமும், விட்டுவிட்டு இருமலும் இருந்துவந்துள்ளது. அவருக்கு எண்டோஸ்கோபி செய்துபார்த்ததில் குரல்வளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கட்டியை பயாப்ஸி முறையில் சோதித்துப்பார்த்ததில் அது புற்றுநோய்கட்டி என்பதும் நான்காம் நிலையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அதை உடனடியாக நீக்கவேண்டும் என்பதும் தெரியவந்தது.
புற்றுநோய் சிகிச்சைக்கான செயல் திட்டம் :
உடனடியாக செயலில் இறங்கிய டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையின், தலை மற்றும் கழுத்துப்பகுதி புற்றுநோய் சிறப்பு மருத்துவரான, டாக்டர். மேஜர். ஜி. வசந்த்குமார் மற்றும் அவருடைய திறமையான மருத்துவகுழுவும் இணைந்து கிருஷ்ணமூர்த்தி அவர்களின் புற்றுநோய் அறுவைசிகிச்சையை சிறப்பாக செய்தனர். டாக்டர். வசந்தகுமார் அவர்கள் குரல்வளை (எண்டோலாரிஞ்சியல் மற்றும் மைக்ரோலாரிஞ்சியல் லேசர் சர்ஜரி) லேசர் அறுவைசிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதுடன், குரல்வளம் மீட்பு அறுவை, குரல்வளை புனரமைப்பு அறுவை மற்றும் மேற்புறசுவாசமண்டல அறுவைசிகிச்சைகளில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து டாக்டர். வசந்தகுமார் கூறுகையில் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு புற்றுநோய் உள்ளது தெரிந்தவுடன் சிடி ஸ்கேன் மூலம் அதன் பரவல் ஸ்டேஜ் 4A என்பதை கண்டுபிடித்தோம். இதன்மூலம் புற்றுநோய்கட்டி பெரிதாக வளர்ந்துவிட்டது என்பதும் குரல்வளையின் தசைகள் மற்றும் குறுத்துஎலும்புகள்வரை பரவிவிட்டதும் தெரியவந்தது. அதன்பின்பு புற்றுநோய் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவி உள்ளதா என்பதையும் பரிசோதித்து எங்கள் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவினருடன் கலந்தாலோசித்து அவருக்கான சிகிச்சையை திட்டமிட்டோம். கட்டி பெரிதாக இருந்ததால் குரல்வளையை முழுவதுமாக (டோட்டல்லாரிங்கெக்டமி) தொண்டையின் ஒரு பகுதியுடன் சேர்த்து நீக்க வேண்டி இருந்தது. இந்த அறுவைசிகிச்சை முடிந்து நான்கு வாரங்கள் கழித்து கதிர்வீச்சு சிகிச்சை ஏழுவாரங்களுக்கு கொடுக்க முடிவு செய்தோம். இத்துடன் புற்றுநோய்க்கான சிகிச்சை வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. ஆனால் நோயாளியின் குரல்வளையை முழுவதுமாக அகற்றிவிட்டதால் அவரால் இனி பேசமுடியாது என்ற நிலை அல்லவா? இங்குதான் நவீன மருத்துவ தொழில்நுட்பம் உதவுகிறது.
பொதுவாக இந்த அறுவைசிகிச்சைக்கு பின்பு நோயாளியை பேசவைக்க மூன்று முறைகளை பயன்படுத்துவோம்,
முறை :1 இந்த முறையில் எலக்ட்ரோலாரிங்ஸ் என்ற, சிறிய பாட்டரியில் இயங்கும் கருவி குரல்வளை இருந்த இடத்தில் அல்லது வாயில் பொருத்தப்படும். இக்கருவியில் இருந்து வரும் முனுமுனுக்கும் சத்தத்திற்கு ஏற்ப தன் உதடுகளை அசைப்பதன் மூலம் வார்த்தைகளை உச்சரிக்கலாம். ஆனால் இது ஒரு ரோபோ பேசுவது போல் இருக்கும்.
முறை :2 ஈஸோபேஜியல் ஸ்பீச் என்ற இந்த முறையில் பேச்சுமொழி நிபுணர் நோயாளிக்கு காற்றை எப்படி விழுங்கி, தொண்டையிலிருந்து ஏப்பம் போல் வெளியிட்டு, வெளியிடும் காற்றுக்கு ஏற்ப நாக்கு பற்கள் மற்றும் உதடுகளை உபயோகித்து ஒலியை உண்டாக்குவது எப்படி என்பதை சொல்லிக் கொடுப்பார்.
முறை :3 டிஇபி (ட்ரக்கியோஈசோஃபேஜியல் பஞ்சர்) என்ற இந்த முறையில் குரல்வளையை நீக்கும் அறுவை சிகிச்சையின் போதோ அல்லது பின்பு தனியாகவோ மூச்சுக்குழலுக்கும் உணவுக்குழலுக்கும் இடையே ஒரு துவாரம் மூலம் சிறுகருவியை பொறுத்தி விடுவார்கள், நோயாளி பேசும்போது இந்த துவாரத்தை மூடிக்கொண்டு இந்த கருவி மூலம் காற்றை அழுத்தமாக வெளியிடும்போது தொண்டையின் சுவர்களில் அதிர்வை உண்டாக்கி அவரால் பேசமுடியும். உற்சாகமும் பயிற்சியும் கொடுக்கும்போது நோயாளியால் நன்றாக பேச முடிவதால் இது மற்ற முறைகளைவிட சிறந்ததாக இருக்கிறது.
இந்தமுறை பற்றி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு கூறியபோது அவர் புற்றுக்கட்டி மற்றும் குரல்வளை அகற்றும் சிகிச்சையின்போதே டிஇபி முறையை செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். கதிர்வீச்சு சிகிச்சை முடிந்தபின் அவருக்கு பேச்சுபயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது ஒரு சில வார்த்தைகள் பேசும் இவர் தொடர்ந்து பயிற்சிக்குபின் சகஜமாக பேசமுடியும்" என்று கூறினார் டாக்டர் வசந்த் குமார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் இங்கு டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் எங்கள் மருத்துவக்குழு நோயாளியின் புற்றுக்கட்டியை சரியான நேரத்தில் அகற்றியதோடு மட்டுமல்லாமல் குரல்வளை நீக்க அறுவை சிகிச்சைக்குப் பின் நோயாளி மீண்டும் இயல்பாக பேசுவதற்கு தகுந்த சிகிச்சையை மேற்கொண்டோம்.
இச்சிகிச்சையை பற்றி தன் அனுபவத்தை கூறிய கிருஷ்ணமூர்த்தி அவர்கள் "டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையின் மருத்துவர்கள் குழுவிற்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மும்பையில் இருந்து மாற்றலாகி சென்னை வந்த எனக்கு சில மாதங்களாக குரல் மாற்றமும் இருமலும் இருந்தது. வீட்டுவைத்தியம் பயன்படாத நிலையில் எனக்கு புகையிலை மற்றும் பான் போடும் பழக்கம் இருந்ததால் காமாட்சி மருத்துவமனைக்கு வந்தேன். இங்கு எனக்கு குரல்வளையில் புற்றுநோய் இருப்பதும் அறுவைசிகிச்சை மூலம் குரல்வளையை அகற்ற வேண்டும் என்பதும், இதனால் என்னால் பேசமுடியாது என்பதும் தெரிந்து மனம் ஒடிந்துபோனேன். என் பேச்சை நம்பி என் வேலை இருக்கிறது. என் வருமானத்தை நம்பி என் குடும்பம் உள்ள நிலையில் இது எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் தான் மருத்துவர் ஒரு சிறுகருவியை பொருத்துவதின்மூலம் என் பேச்சை திரும்ப பெற முடியும் என்று நம்பிக்கை அளித்தார். அதன்படி நான்கு மாத சிகிச்சைக்கு பின்னர் தற்போது ஓரளவு பேசுகிறேன். வேலையிலும் சேர்ந்துவிட்டேன். கொஞ்சம் கடின பயிற்சி செய்தால் உங்களைப்போல நானும் சரளமாக பேசுவேன் என்று நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் தெரிவித்தார்.
டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை:
2005 ஆம் ஆண்டு நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் T.G. கோவிந்தராஜன் அவர்களால் நிறுவப்பட்டு 75 ஆயிரம் சதுர அடியில் 300 படுக்கைகள் கொண்ட பல்துறை சிறப்பு மருத்துவமனையாக பள்ளிக்கரணையில் இயங்கி வருவது டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை. இம்மருத்துவமனையில் நவீன மருத்துவ தொழில்நுட்பம் நிறைந்த சகல வசதிகளும் உள்ளன. உடனடி மருத்துவ உதவி, மருந்தகம், இணைய வழி மருத்துவ ஆலோசனை, அதி நவீன பரிசோதனை கூடம், சுத்தமான மருத்துவமனை வளாகம் மற்றும் நோயாளிகளுக்கு சிறந்த வழிக்காட்டுதல் தரும் பணியாளர்கள் இங்கு உள்ளனர்.
இம்மருத்துவமனையில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை பிரிவு திறமையான மருத்துவர்கள், புற்று நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கான நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் சிறந்து விளங்குகிறது. டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை மேடவாக்கம், பல்லாவரம்( LK ஹாஸ்பிடல்) மற்றும் தற்போது அடையார் சாஸ்திரி நகரிலும் இயங்கி வருகிறது. உலகளவில் மருத்துவ சுற்றுலாவிற்கு வருபவர்களை பெரிதும் ஈர்த்து வருவதற்கு காரணம் இங்கு தரமான சிகிச்சை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் உறுதியாக இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.