குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் காலில் விழுந்து கதறி அழுத மூதாட்டி

‘மகன் விரட்டியதால் பிச்சை எடுக்கிறேன்‘ என்று கூறி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் காலில் விழுந்து மூதாட்டி கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-10-01 23:44 GMT
சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகளை கலெக்டரிடம் மனுவாக கொடுத்தனர். பின்னர் அலுவலக கீழ்தளத்திற்கு வந்து மாற்றுத்திறனாளிகள், முதியோர்களிடம் கோரிக்கை அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென்று ஒரு மூதாட்டி கையில் மனுவை வைத்துக்கொண்டு கலெக்டர் காலில் விழுந்து கதறி அழுதார். இதனால் பதறிப்போன கலெக்டர் ரோகிணி, மூதாட்டியிடம் அன்பாக பேசி விசாரித்தார். அப்போது அந்த மூதாட்டி சேலம் கருங்கல்பட்டியை சேர்ந்த சரஸ்வதி (வயது 85) என்றும், தனது மகன் தன்னை வீட்டை விட்டு விரட்டி விட்டான் எனவும், இதனால் தான் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பிச்சை எடுப்பதாகவும், எனவே தன்னை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டும் என்று அவர் கலெக்டரிடம் கூறினார்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் ரோகிணி, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமியை அழைத்து மூதாட்டியை உடனே முதியோர் இல்லத்தில் சேர்க்க உத்தரவிட்டார். அதன்படி, மூதாட்டி சேலம் போதிமரம் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

மேலும் மூதாட்டிக்கு மாதந்தோறும் முதியோர் உதவித்தொகையை அந்த முதியோர் இல்லத்திலேயே கொண்டு சென்று அவரிடம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கலெக்டர் காலில் மூதாட்டி விழுந்து கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்